தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்❓
தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா❓
அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா❓
கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்1679
ஒருவர் முன்சுன்னத் தொழும் போது இகாமத் சொல்லப்பட்டால் உடனே அவர் தொழுகையை விட்டுவிட வேண்டும் என்று சிலர் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு கூறுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை.
இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையில்லாத வேறு எந்தத் தொழுகையையும் துவங்கக் கூடாது என்பதே இந்தச் செய்தியின் பொருளாகும்.
இகாமத் என்பது கடமையான தொழுகைக்குரிய அழைப்பாகும். இந்த அழைப்பு விடப்பட்டால் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதே முறையான செயல். இந்த அழைப்புக்குப் பிறகு உபரியான வணக்கத்தில் ஈடுபட்டால் கடமையான தொழுகையை அலட்சியம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
நாம் பள்ளிக்கு வரும் போது இகாமத் சொல்லப்பட்டால் முன்சுன்னத், தஹிய்யதுல் மஸ்ஜித் உள்ளிட்ட எந்தத் தொழுகையிலும் ஈடுபடாமல் ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும்.
தொழுகையின் திறவுகோல் உளூவாகும். அதன் உள் நுழைதல் தக்பீர் ஆகும். வெளியேறுதல் ஸலாம் கொடுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதி 3
ஒரு தொழுகையைத் துவக்கி விட்டால் அதை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்துத் தான் முடிக்க வேண்டும். இடையில் முடிக்கக் கூடாது.
ஏகத்துவம்