வீட்டில் இருந்து கொண்டு இமாமைப் பின்பற்றலாமா❓ https://eagathuvam.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகை நடக்கின்றது. அந்த ஜமாஅத்தைப் பின்பற்றி வீட்டில் தொழலாமா❓
பள்ளிவாசலில் தொழுகை நடக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் அதைப் பின்பற்றுவதில் இரண்டு நிலைகள் உள்ளன.
பள்ளிவாசலில் இடம் போதாமல் போகும் போது அதை ஒட்டி உள்ள ஒரு வீட்டை ஜும்ஆ போன்ற நாட்களில் அனுமதி பெற்று அங்கே சிலர் தொழுவதற்கு ஏற்பாடு செய்தல் ஒரு வகை.
இந்த வகையில் இருந்தால் அவரைப் பின்பற்றி அவ்வீட்டில் தொழுபவர்கள் இமாமின் செயல்களை அறிந்து கொள்ள தக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் பள்ளியும், வீடும் அடுத்தடுத்து இருந்தால் பின்பற்றித் தொழலாம்.
அவ்வாறு இல்லாமல் நாமாக வீட்டில் இருந்து கொண்டு பள்ளிக்குச் செல்வதை தவிர்த்து விட்டு வீட்டில் தொழுவதும், காணொளியின் ஒளிபரப்புகிற நேரலையை வைத்தும். பதிவு செய்த தொழுகையை தொலைக்காட்சி அல்லது கைப்பேசியை கொண்டோ தொழுதால் நீங்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டவராக மாட்டீர்.
ஏனென்றால் ஜமாஅத் தொழுகைக்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளன. ஜமாஅத் தொழுகையில் ஸஃப்பை சீராக அமைப்பது அவசியம். முதல் வரிசை நிறைவுறாமல் அடுத்த வரிசையில் நிற்கக்கூடாது. அப்படி நின்றால் தொழுகை செல்லாது என்ற அளவுக்கு நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
மக்களுடன் நெருங்கி நிற்பதற்கு இடம் இருக்கும் பட்சத்தில் அங்கே நிற்காமல் தனியே நின்று தொழுதால் அது தொழுகை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.
நூல் : அபூதாவூத் (584)
எனவே இது போன்ற நிலையில் பள்ளியில் நடக்கும் ஜமாஅத்தைப் பின்பற்றி வீட்டில் உள்ளவர்கள் தொழுவது கூடாது.
ஏகத்துவம்