//தொழுகையில் மூன்றாம் ரக்அத்//
இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக் கொள்ளலாம். இதற்குரிய ஆதாரங்களை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 739
நிலையில் ஓத வேண்டியதை ஓதிய பின்னர் ஏற்கனவே கூறிய படி ருகூவு, ஸஜ்தாக்களை நிறைவேற்ற வேண்டும்.
\நான்காம் ரக்அத்\
மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
பின்னர் முதல் இருப்பில் ஓதிய அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகியவற்றை ஓத வேண்டும். அத்துடன் பின் வரும் துஆக்களையும் ஓத வேண்டும்.
\இருப்பில் ஓதும் துஆக்கள்\
உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 926
அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால். பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 924
அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஓதுவதற்குரிய ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன்.
அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.
பொருள்:
இறைவா! எனக்கே நான் அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்) என்று கூறுவீராக’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி), நூல்கள்: புகாரி 834, முஸ்லிம் 4876
அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ, அல்லது மேற்கூறிய துஆக்கள் ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே கேட்டு துஆச் செய்யலாம்.
‘(அத்தஹிய்யாத் ஓதிய பின்னர்) உங்களுக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் துஆச் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),
நூல்கள்: புகாரி 835, முஸ்லிம் 609
\ஸலாம் கூறி முடித்தல்\
இதன் பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.
வலது புறமும், இடது புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்‘ என்று நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்கள்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516
நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களது கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன்.
அறிவிப்பவர்: ஸஅது (ரலி),
நூல்: முஸ்லிம் 916
——————————-
தொழுகை சட்டங்கள்