தொழுகையில் முதல் அமர்வில் அத்தஹிய்யாத் ஓதி பின் ஸலவாத் ஓத வேண்டுமா?
தொழுகையில் முதல் அத்தஹிய்யாத் இருப்பில் அமரும்போது ஸலாவத் ஓதலாம் என்றும் சிலர் ஓதத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஓதக்கூடாது என்போர் ஒரு ஆதாரத்தை எடுத்துவைக்கின்றனர். அதைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் :திர்மிதீ (334)
இதே செய்தி நஸாயீ (1163), அபூதாவூத் (844),அஹ்மத் (3474,3700,3867,3940,4157,4158,) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தச் செய்தி செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதை இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூஉபைதா அவர்கள் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் அவர்களிடம் எந்தச் செய்தியையும் செவியுறவில்லை.
அனைத்து நூல்களிலும் இதே அறிவிப்பாளர் வரிசையுடனே இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது ஆதாரப்பூர்வான செய்தி இல்லை.
முதல் இருப்பில் அத்தஹிய்யாத் மட்டும் ஓதுவதற்கு காட்டும் இந்த ஆதாரம் பலவீனமானதாக உள்ளதால் இதன் அடிப்படையில் முதல் இருப்பில் ஸலவாத் ஓதக்கூடாது என்று கூறமுடியாது.
முதல் இருப்பிலும் ஸலவாத் ஓத வேண்டும் என்று அறிவிக்கும் சில செய்திகள் உள்ளன. அவற்றின் தரத்தைப் பார்ப்போம்.
உங்களில் ஒருவர் தொழுகையில் தஷஹ்ஹுதில் (இருப்பில்) இருக்கும் போது அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத்தின் . . . என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),
நூல் : ஹாகிம், பாகம் :1, பக்கம் : 402
இதே அறிவிப்பாளர் தொடரில் பைஹகீம் இமாம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் செவியுற்றவர் ஹாரிஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மனிதர் என்று கூறப்பட்டுள்ளது. இவர் யார்? இவரின் நம்பகத்தன்மை என்ன? என்பது தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை. எனவே இது யாரெனத் தெரியாதவர் அறிவித்த பலவீனமான செய்தியாகும்.
நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து வஸ்ஸலவாத்து . . . அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்தின் அஅஹ்லி பைத்திஹி கமா ஸல்லைத்த . . . என்பதை எனக்கு கற்றுத் தந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),
நூல் : தப்ரானீ – கபீர், பாகம் : 8, பக்கம் : 376)
இதே அறிவிப்பாளர் தொடரில் இமாம் தாரகுத்னீ அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் என்ற துஆவுடன் ஸலாவத்தை கற்றுத் தந்துள்ளதால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த துஆ ஆகும். எனவே இரண்டையும் ஓதவேண்டும் என்ற கருத்தை இந்த நபிமொழியிலிருந்து சிலர் எடுத்துக் காட்டுகின்றனர்.
இந்தச் செய்தியில் அப்துல் வஹ்ஹாப் பின் முஜாஹித் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அந்தச் செய்தியின் கீழ் பதிவு செய்துள்ளார்கள்.
புரைதாவே! நீர் தொழுகையில் அமர்ந்தால் தொழுகையில் தஷஹ்ஹுதையும் என்மீது ஸலாவாத் ஓதுவதையும் விட்டுவிடாதே! ஏனெனில் இது தொழுகையை தூய்மைப்படுத்துவதாகும். மேலும் அனைத்து நபிமார்கள் மீதும் நல்லடியார்கள் மீதும் ஸலாம் கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : தாரகுத்னீ, பாகம் :3, பக்கம் : 489
இச்செய்தியில் இடம்பெறும் அம்ர் பின் ஷமிர், ஜாபிர் பின் யஸீத் அல்ஜஅஃபீ ஆகிய இருவரும் பலவீனமானவராவார்.
அம்ர் பின் ஷமிர் என்பவர் மதிப்பற்றவர் என்று யஹ்யா அவர்களும் வழிகெட்டவர், பொய்யர் என்று அல்ஜவ்ஸஜானீ அவர்களும் கூறியுள்ளார்கள். இவர் ராஃபிளியா கொள்கையைச் சார்ந்தவர், நபித்தோழரைத் திட்டுவார், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நம்பகமானவரிடமிருந்து அறிவிப்பார் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள்.
(நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 268)
ஜாபிர் பின் யஸீத் என்பவர் ராஃபிளியா கொள்கையைச் சார்ந்தவர் பலவீனமானவர்.
நூல் : தக்ரீபுத் தஹ்தீபு, பாகம் :1, பக்கம் :137
தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ஸலவாத் ஓத வேண்டும் என்று காட்டிய அனைத்து செய்திகளும் பலவீனமானதாக உள்ளது. இதைப் போன்று இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் மட்டுமே ஓத வேண்டுமென காட்டும் ஆதாரமும் பலவீனமாதாக உள்ளது.
எனினும் இரண்டாவது ரக்அத்தில் ஸலவாத் ஓத வேண்டும் என்பதை வேறு ஆதாரங்களின் மூலம் நிறுவ முடியும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?” என்று கேட்டார். “இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே’ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) “நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்
(பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!) என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி),
நூல்: அஹ்மத் 16455
இந்த நபிமொழியில் நபிகளார் முதல் இருப்பு, இரண்டாம் இருப்பு என்று பாகுபடுத்திக் கூறாமல் தொழுகையில் ஸலவாத் கூறுவதை விளக்கியுள்ளார்கள். முதல் இருப்பில் இதை ஓதவேண்டும். இரண்டாம் இருப்பில் இதை ஓதவேண்டும் என்று நபிகளார் தனித்தனியாக பிரித்து சொல்லாதவரை நாம் ஸலவாத்தையும் சேர்த்தே ஓதவேண்டும்.
மேலும் திருக்குர்ஆனில் கூறுகிறான்
அல்லாஹ் இந்த நபிக்கு அருள்புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
(அல்குர்ஆன் 33:56)
இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நபிகளாருக்கு ஸலாம் மற்றும் ஸலவாத் சொல்கிறோம். தொழுகையில் நாம் அத்தஹிய்யாத் என்ற துஆவில் நபிகளார் மீது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு என்று சலாம் சொல்கிறோம். ஆனால் அதில் ஸலவாத் வருவதில்லை. எனவே திருக்குர்ஆனின் கட்டளை நிறைவேற்றும் போது ஸலாமும் ஸலவாத்தும் நாம் கூறவேண்டும். இந்த அடிப்படையை கவனித்தால் ஒவ்வொரு இருப்பிலும் அத்தஹிய்யாத் என்ற துஆவையும் ஸலவாத்தையும் ஓதவேண்டும் என்பதை அறியலாம்.
onlinetntj