தொழுகையின் போது ஸஜ்தா…
ருகூவிலிருந்து எழுந்து, ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைப் பார்ப்போம்.
\கைகளை முதலில் வைக்க வேண்டும்\
ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: நஸயீ 1079
\தரையில் பட வேண்டிய உறுப்புகள்\
ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது.
ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும்.
இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும்.
தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
‘நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் – நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் – ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 812
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன் கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி),
நூல்கள்: நஸயீ 18115,அஹ்மத் 18115, தாரமீ 1323
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: நஸயீ 1093
‘நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: முஸ்லிம் 763
…நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), நூல்: புகாரி 828
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து விரல்களைக் கிப்லாவை முன்னோக்கி வைத்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: இப்னுஹுஸைமா 654, இப்னுஹிப்பான் 1933, ஹாகிம் 832
——————————
தொழுகை சட்டங்கள்