தொடர் உதிரப்போக்கு
சில பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் பல நாட்கள் தொடர்ந்து இரத்தம் வந்துகொண்டிருக்கும். இது ஒரு நோய். ஆனால் இதை சிலர் மாதவிடாய் என கணித்து தொழமாமல் இருந்துவிடுகின்றனர். இது தொடர்பாக இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் என்னவென்பதைக் காண்போம்.
வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகை நோன்பு உடலுறவு போன்ற விஷயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகும் இரத்தம் தொடர்ந்து வருமானால் அப்போது குளித்துவிட்டு மாதாவிடாய் ஏற்படாத பெண் எவ்வாறு நடந்துகொள்வாளோ அதுபோன்று தொடர் உதிரப்போக்கு ஏற்படுபவர்கள் நடந்துகொள்ள வேண்டும். இவர்கள் தொழுகையையும் நோன்பையும் விடுவதற்கு அனுமதியில்லை.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப்போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது இந்த நோய் வருவதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்துகொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து விட்டுத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு அவள் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : நஸயீ (351)
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை! (தொழுகையைவிட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு ; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுதுகொள்!” என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மனியிடம்) “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கசுத்தி (உளூ) செய்துகொள்!” என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (228)
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் மாதவிடாய் நாட்கள் முடிந்தவுடன் குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்துகொள்ள வேண்டும். அல்லது முடியுமானால் பின்வரும் முறையை கடைபிடிக்கலாம்.
ஒரு பெண்ணிற்கு தொடர்உதிரப்போக்கு ஏற்படுகிறது. (அவள் என்ன செய்ய வேண்டும்?) என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் (தொழாமல் நோன்பு நோற்காமல்) இருப்பாள். (மாதவிடாய்க் காலம் முடிந்த உடன்) குளித்து விட்டு லுஹரை அதன் கடைசி நேரத்திலும் அஸரை அதன் ஆரம்ப நேரத்திலும் அவள் தொழ வேண்டும்.
பிறகு மீண்டும் குளித்துவிட்டு மஃரிபை அதன் கடைசி நேரத்திலும் இஷாவை அதன் ஆரம்ப நேரத்திலும் தொழுது கொள்ள வேண்டும். பின்ப ஃபஜர் தொழுகைக்காக (மீண்டும்) குளித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)
நூல் : நஸயீ (358)
தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படாத பெண்களைப் போன்று நடந்துகொள்வார்கள். எனவே இவர்கள் தொழுக வேண்டும். நோன்பு நோற்க வேண்டும். இவர்கள் கணவனுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு தடை ஏதுமில்லை.