துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா செய்வது சரியா?
இல்லை. இது பித்அத்.
மய்யித்தை அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து கைகொடுத்துக் கொள்ளும் வழக்கம் சில முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கட்டாயம் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கு வராதவர்கள் இறந்தவருக்கு மிகப்பெரும் எதிரி போல் சில ஊர்களில் கருதப்படுகின்றனர்.
ஒரு முஸ்லிம் சகோதரர் மரணித்துவிட்டால் அவருக்காக ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாக நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
(பார்க்க புகாரி 1240)
ஆனால் அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் கைகொடுத்து ஸலாம் சொல்லிக் கொள்வதும். ஸலவாத் ஓதிக் கொள்வதும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான அனாச்சாரங்களாகும்.
எனவே இது போன்ற காரியங்களில் நாம் பங்கெடுப்பது கூடாது. இதனால் இறந்தவருக்கு எந்தப் பயனும் ஏற்படாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 2697
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
நானும் ஜனாசாவில் கலந்து கொண்டேன் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இறந்தவரின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்து இருக்கும் போது மூன்று நாட்கள் அவர்கள் கவலைப்படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கும் போது அவர்களைத் தேடிச் சென்று தொல்லைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது