தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!
மனிதன் மனிதனைக் கடவுளாக்கினான். இங்கு தான் தெய்வீகத்தன்மை யாருக்குச் சொந்தம் என்பதைத் திருக்குர்ஆன் விளக்கியது. தெய்வீகம் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தம்; அவனுடைய தனித்தன்மை; அந்தத் தனித்தன்மையில் மனிதனுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை என்று முழங்கியது.
இதோ திருக்குர்ஆன் கடவுள் கொள்கையைப் பற்றி முழங்குகின்றது.
“மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:158)
தாயின் வயிற்றில் உருவாக்கியவன் அவனே!
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.
(அல்குர்ஆன் 39:6)
இப்போது உலக மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமை என்றாகி விடுகின்றனர். வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!
இதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இனம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்துத் திரைகளும், வேறுபாடுகளும் அகன்று விடுகின்றன. அனைத்துத் தடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு விடுகின்றன.
ஒன்றே குலம்
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் இஸ்லாம், “ஒருவனே தேவன், ஒன்றே குலம்’ என்று கூறுகின்றது.
ஒரே கடவுள் என்ற வட்டத்திற்குள் உலக மக்கள் வந்து விட்டால் கடவுள் நம்பிக்கையில் அவர்களுக்கு மத்தியில் ஓர் இணக்கம், ஐக்கியம் ஏற்பட்டு அதன் மூலம் தத்துவ ரீதியில் அவர்கள் ஒரே குலமாகி விடுகின்றனர். அந்த ஒற்றுமை வெறும் சிந்தனையாக ஏட்டளவில் இருக்கக்கூடாது. அது செயல்பாட்டளவில் வந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அதைத் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 49:13)
மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.
குலம், கோத்திரம்
மனிதன் ஒரு சமூகப் பிராணி! அவன் கூட்டாகத் தான் வாழ்ந்தாக வேண்டும். அந்தக் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது ஒருவன் தலைமைப் பொறுப்பேற்கின்றான். சமூகத்தில் இதனால் அவனது குடும்பத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கின்றது. பிறகு அந்த ஊரை, அந்த நாட்டை, தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பம் ஆண்டு வருகின்றது. அது மன்னர் பரம்பரை என்று அழைக்கப் படுகின்றது. அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஒரு சீர்திருத்தச் சிந்தனைவாதி தோன்றியிருப்பான். அதனால் அந்தக் குடும்பம் மதிக்கப்படும். இந்தச் சமூக அந்தஸ்து தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.
குரைஷிக் குலம்
இதற்கு உதாரணமாக அரபியாவின் குரைஷிக் குலத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்.
இவர்கள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)
இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.
குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)
தனித்துவத்தைத் தக்க வைத்தல்
ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.
ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையாரைத் தவிர. ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1665
இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, முற்றுப்புள்ளி வைக்கின்றது.
மக்கள் எங்கிருந்து புறப்படு கிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான்.
(புகாரி 1665)
அல்குர்ஆனின் இந்த ஆணைப் படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப் படுகின்றது. அதன்படி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.
அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், “இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 1664
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் போதனை தகர்க்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப் பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
தாழ்த்தப்பட்டவர் தளபதியான அதிசயம்
தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3730
பிரஞ்சுப் புரட்சி
குலம், கோத்திரத்தால் தீண்டாமை ஏற்படுவது போல் செல்வத்தாலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டதற்குக் காரணம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்பட்ட வேறுபாடு தான். பிரான்ஸ் தேசிய சட்டசபையில் பாதிரியார்கள், பிரபுக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று மூன்று சாரார் இருந்தனர். இம்மூன்று சாராரில் ஆளும் வர்க்கத்தினருக்கும், பணக்கார வர்க்கத்தினருக்கும் ஜால்ரா போடும் பாதிரியார்கள் மற்றும் பிரபுக்கள் ஆகியோருக்குத் தான் வாக்குரிமை இருந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாக்களிக்க உரிமை இல்லை.
வாக்களிக்கும் போது தலைகளை எண்ணுங்கள்; தரத்தை எண்ணாதீர்கள் என்று நடுத்தர வர்க்கத்தினர் கோரினர். ஆனால் மன்னர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தோன்றியது தான் பிரஞ்சுப் புரட்சி!
இப்படி செல்வம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களால் உருவாக்கப் படும் ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் தகர்க்கின்றது.
முளையிலேயே கிள்ளிய திருக்குர்ஆன்
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
(அல்குர்ஆன் 18:28)
காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தாருடன் இருக்குமாறும், மனோ இச்சையைப் பின்பற்றியவனுக்குக் கட்டுப்பட வேண்டாம் எனவும் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றது.
இறைவனைக் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தார் எனக் குறிப்பிடப்படுவோர் இவ்வுலகின் புகழ், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருந்தனர் எனவும் மனோ இச்சையைப் பின்பற்றியோர் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக இருந்தனர் எனவும் இந்த வசனத்தி-ருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. “இவ்வுலகின் கவர்ச்சியின் பால் உமது கண்களைத் திருப்ப வேண்டாம்’ என்ற சொற்றொடரிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
இது போன்ற கருத்தை 6:52 வசனமும் கூறுகின்றது.
(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!
(அல்குர்ஆன் 6:52)
இவ்வசனத்தில் காலையிலும் மாலையிலும் இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு விரட்டினால் அநீதி இழைத்தவராவீர் எனவும் கூறப்படுகின்றது.
இது எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட அறிவுரை என்பதைப் பின்வரும் நபிமொழியி-ருந்து அறிந்து கொள்ளலாம்.
நான், இப்னு மஸ்ஊத், ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், பிலால் மற்றும் இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன். அப்போது இணை வைப்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்களிடம் வந்தனர். “இவர்களை விட்டு விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்களுக்குத் துணிச்சல் வந்து விடும்” என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் எது ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது. அப்போது தான் இந்த (6:52) வசனம் அருளப்பட்டது என்று ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல் : முஸ்லிம் 2413
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களுக்கு நபிகளார் மீது நம்பிக்கை இருந்தது. நாற்பது வருடங்களாக அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையைப் பார்த்த அம்மக்கள், இறைத்தூதர் என்று முஹம்மது பொய் சொல்கின்றார் என நினைக்கவில்லை.
அவர்களிடம் உள்ள முக்கியமான தயக்கம் காலா காலம் கட்டிக் காத்து வந்த சாதி அமைப்பை இவர் உடைத்தெறிகின்றார். உயர் குலத்தைச் சேர்ந்த இவர் இழிகுலத்தைச் சேர்ந்தவர்களைத் தம்மோடு சமமாக அமர வைக்கின்றார். இவரோடு நாமும் சேர்ந்தால் அனைவரையும் சமமாக ஆக்கி விடுவார் என்ற அச்சம் தான் நபிகள் நாயகத்தை ஏற்பதற்குப் பெரிய தடையாக அம்மக்களுக்கு இருந்தது.
எனவே தான் பலவீனர்களை விரட்டினால் அல்லது அவர்களுக்குத் தனி சபையையும் தங்களுக்குத் தனி சபையையும் ஏற்படுத்தினால் இஸ்லாத்தை ஏற்கத் தயார் என்று அவர்கள் கோரினார்கள்.
செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்வது பலம் சேர்க்கும் என்று நினைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைச் சரி என நினைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதை மேற்கண்ட முஸ்லிம் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையையும் சேர்த்து ஏற்றாக வேண்டும். தமக்கு வசதியானதை மட்டும் ஏற்று, மற்றதை ஏற்க மறுப்பவர்களுக்காக வளையத் தேவையில்லை. அவர்கள் வரத் தேவையில்லை என்பது தான் அல்லாஹ்வின் நிலையாக இருந்தது.
எனவே தான் இவ்வசனங்களில் கடுமையாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான். ஏற்கனவே முழு இஸ்லாத்தை ஏற்றவர்களுடன் தான் இருக்க வேண்டுமே தவிர பாதி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவோரின் செல்வம், செல்வாக்கு போன்றவற்றால் கவரப் பட்டுவிட வேண்டாம் என்று கண்டிக்கின்றான். சாதாரண மக்களுக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்-ம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.
தொண்டருக்கு ஸலாம் கூறும் தலைவர்
செல்வம், செல்வாக்கு மிக்கவர்களுக்காக ஏழைகளின் உணர்வைக் காயப்படுத்தும் அந்தக் காட்டுத்தன்மை, ஏழைகளின் இயக்கமான இஸ்லாமிய மார்க்கத்தை உலகுக்குக் கூற வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக அதை முளையிலேயே கிள்ளி எறிகின்றான். ஒரு தலைவர் தொண்டரிடத்தில் பார்க்க வேண்டியது இறையச்சம், மார்க்கப் பற்று ஆகிய அம்சங்களைத் தானே தவிர செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அல்ல என்று வல்ல அல்லாஹ் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறான். அத்துடன் இன்னொரு விஷயத்தையும் தன் தூதரிடம் அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.
(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 6:54)
இன்று உலகில் தொண்டர்கள் தான் தலைவருக்கு முகமன், வாழ்த்துச் சொல்ல வேண்டும். மாணவர் தான் ஆசிரியருக்கு முகமன் சொல்ல வேண்டும். மனைவி தான் கணவனுக்கு முகமன் சொல்ல வேண்டும்.
இந்தக் கலாச்சாரத்தையெல்லாம் மாற்றியமைத்து தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தொண்டர்களுக்கு ஸலாம் சொல்லுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.
ஏழைகளுக்கு இந்த இஸ்லாமிய மார்க்கம் கொடுக்கும் மரியாதையைப் போன்று வேறு எந்த இயக்கமும் மரியாதை வழங்குமா? இந்த இயக்கத்தில் தீண்டாமை எள்ளளவு, எள் முனையளவாவது தலை காட்ட முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஆட்சியாளர்களும் அடிமைகளும்
தீண்டாமையை உருவாக்குவதில் ஆட்சியதிகாரம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒருவனுக்கு அதிகாரம் வந்தவுடனேயே அவன் மற்றவர்கள் தனக்குப் பணிய வேண்டும்; பாதத்தில் விழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விடுகின்றான்.
எனவே ஆள்பவன் கடவுள் நிலைக்கும், ஆளப்படுபவன் அடிமை நிலைக்கும் போய் விடுகின்றான். இதனால் ஆள்பவனின் குடும்பத்தார் உயர் ஜாதியினராகவும், ஆளப்படுபவனின் குடும்பத்தார் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படும் நிலை உருவாகி விடுகின்றது. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது.
சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
(அல்குர்ஆன் 41:37)
படைப்பினங்கள் எதற்கும் சிரம் பணியக்கூடாது; அவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே சிரம் பணிய வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கட்டளையிடுகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப் படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)
இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.
“உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்” என்று பிரகடனம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3475
உயர்குலத்தவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனிச் சட்டம் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத் தன் மகளை முன்னிறுத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கின்றார்கள்.
தேசியம், மொழி உணர்வுகள்
மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப் பற்றும், மொழி வெறியும் திகழ்கின்றன.
இலங்கை பற்றி எரிவதற்கும், இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழி வெறி தான் காரணம்.
இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
நூல்: முஸ்லிம் 3440
இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது.
அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம்! மொழி உணர்வு! என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழி வெறியின் குரல்வளையைப் பிடித்து திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.
எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.
உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)
என்று மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.
தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்து காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல, உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது.
இதை விளங்கி நடக்க, அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள்புரிவானாக!
ஏகத்துவம்