தியாக நபியின் தியாகக் குடும்பம்(இப்ராஹீம் (அலை))
இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் மக்கள் நடத்திய விசாரணையை, அதற்கு அவர் அளித்த ஆணித்தரமான பதிலைப் பார்ப்போம்.
இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.
“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.
“நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.
“நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.
“அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)
அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.
“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.
“ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.
“அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர்.
“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.
உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.
பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.
“அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)
அல்குர்ஆன் 21:51-67
அரசனிடம் வீர முழக்கம்
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
தந்தையிடம் ஆற்றிய தவ்ஹீதுப் பிரச்சாரம்
இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
“என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்”
“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்”
என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்‘ (என்றார்.)
“இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.
“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 19:41-47
ஊர் கூடித் தண்டனை
“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.
அல்குர்ஆன் 21:68
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.
“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை இழப்பை அடைந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் 21:69, 70
இவ்வளவு சோதனையைச் சந்தித்து, இனிமேல் அந்த ஊரில் வாழ முடியாது என்றாகி விடுகின்றது.
அன்னை சாரா அவர்களின் அரிய தியாகம்
ஊரார், உறவினர், நாடாளும் அரசன் அத்தனை பேரையும் பகைத்த பின்னர் அவர்களுக்கு நாடு துறந்து செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதனால் அவர்கள் நாடு துறந்து செல்கிறார்கள்.
அவரை லூத் நம்பினார். “நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் 29:26
அவ்வாறு அடைக்கலம் புகுந்த அந்த நாட்டில் அவர்களையும் அன்னை சாராவையும் தவிர்த்து வேறு எந்த இறை நம்பிக்கையாளரும் இல்லை. அந்தச் சூழ்நிலை எப்படியிருந்திருக்கும்? அவ்விருவரின் மனநிலை தான் எப்படி இருந்திருக்கும்? அல்லாஹ்வைத் தவிர அவர்களுக்கு ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் வேறு யாருமே இல்லை.
இத்தனைக்கிடையில் அந்நாட்டு அரசன், திருமணம் முடித்த பெண்களை மட்டும் அனுபவிக்கும் ஒரு சபலம் நிறைந்த காமுகன். சோதனையான, அதே சமயம் சுவையான அந்த நிகழ்வை நபி (ஸல்) அவர்கள் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். “அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்” என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை மன்னன் அழைத்து வரச் செய்து, “இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?” எனக் கேட்டான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் சகோதரி” என்று சொன்னார்கள். பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், “நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறை நம்பிக்கை கொண்டவர் யாரும் இல்லை” என்று சொன்னார்கள்.
பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்து வந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பு நோயால்) கால்களை உதைத்துக் கொண்டான்.
மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, “இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்” என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்குத் திரும்பி, மீண்டும் ஸாராவை நெருங்கினான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களை உதைத்துக் கொண்டான்.
மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, “இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்” என்று பிரார்த்தித்தார். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பி இருக்கின்றீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள்.
இவருக்கு ஹாஜரைக் கொடுத்து விடுங்கள்” என்று மன்னன் சொன்னான். ஸாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ் இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 2217 முஸ்லிம் 4371
சாரா அம்மையாரின் இறை நம்பிக்கை சாமான்யமானதல்ல! மிகப் பெரியது.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
அல்குர்ஆன் 2:153
அல்லாஹ் கூறுகின்ற இந்த வசனத்திற்கு ஓர் உன்னத உதாரணமாகத் திகழ்கின்றார்கள்.
இன்றைய காலத்துப் பெண்ணாக இருந்தால், “உன்னைக் கல்யாணம் முடித்த நாளிலிருந்து நான் சோதனையைத் தான் அனுபவிக்கின்றேன்; ஒன்று இந்தப் பிரச்சாரத்தை விடு, அல்லது என்னை விட்டு விடு’ என்று வற்புறுத்தி இவ்விரண்டில் எதையேனும் ஒன்றைச் செய்ய வைத்து விடுவார்கள்.
இப்படி மாபெரும் ஒரு சோதனையில் சாரா அம்மையார் சாதனையைப் படைத்து, ஒரு தியாகத் திருவிளக்காகத் திகழ்கின்றார்கள்.
அன்னை ஹாஜராவின் அரிய தியாகம்
அரசன் கொடுத்த ஓர் அன்பளிப்பான இப்ராஹீம் நபியின் இன்னொரு மனைவியார் அன்னை ஹாஜரா அவர்களும் மாபெரும் ஒரு தியாக வரலாற்றைப் படைக்கிறார்கள்.
அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, “இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், “அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், “அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
“எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக” என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14:37) ………..(சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி);நூல்: புகாரி 3364
தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நாம், நமது பெண் மக்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்வருவதில்லை. உள்ளூரில் கொள்கை மாப்பிள்ளை வாய்க்காத போதும், வெளியூரில் சிறந்த மாப்பிள்ளை கிடைக்கும் போதும் கூட வெளியூரில் திருமணம் செய்து கொடுப்பதற்கு நமக்கு மனம் வரவில்லை. ஆனால் இப்ராஹீம் நபி மனித சஞ்சாரமில்லாத பகுதியில் கொண்டு போய் தமது மனைவியை விட்டு விட்டு வருகிறார்கள்.
தண்ணீரில்லாத, தானியங்கள் இல்லாத பாலைவனத்தில், நீண்ட காலத்திற்குப் பின் பெற்ற பிள்ளையையும் சேர்த்து விட்டு விட்டு வருகின்றார்கள். இதில் அன்னை ஹாஜரா அவர்கள் கூறும் வார்த்தையை இங்கு கவனிக்க வேண்டும். “அவன் என்னைக் கைவிட மாட்டான்” என்ற வார்த்தை அனைத்துப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் உள்ளங்களிலும் அழுத்தமான இறை நம்பிக்கையைப் பதிய வைக்கின்றது.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
அல்குர்ஆன் 14:37
இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை உள்ளத்தைப் பிழிந்து, கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. தண்ணீருக்காக அவர்கள் மேற்கொண்ட அலைச்சல் இன்றைக்கு ஹாஜிகளின் வணக்கமாக ஆகி விட்டது.
கதறி அழுத இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலடியில் பொத்துக் கொண்டு, பீறிட்டு வந்த தண்ணீர், அன்னையாருக்கும் இஸ்மாயீல் நபிக்கும் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் புனிதப் பொதுவுடைமையாக, ஓர் அற்புதமாக அமைந்திருக்கின்றது. அன்னை ஹாஜராவின் தியாகம் அளப்பரியது, அரிதிலும் அரிதானதாகும்.
தியாக நபியின் தியாக மகன்
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட நாட்கள், அவர்கள் முதுமையை அடைகின்ற வரை குழந்தை இல்லை. ஆனாலும் அவர்கள் அல்லாஹ்விடம் எந்த அவநம்பிக்கையும் கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் 37:100
அவர்கள் கேட்டது போன்றே ஸாலிஹான குழந்தையே அமைந்து விடுகின்றது.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருது கிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.
அல்குர்ஆன் 37:104
கருத்துக் கேட்கும் தந்தையிடம் கழுத்தைத் தரத் தயார் என்று கூறி, “அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று கூறும் மகன் உண்மையிலேயே ஸாலிஹான குழந்தை தான்.
இப்படித் தியாக மிக்க தந்தைக்குத் தப்பாத ஒரு தியாக மகனாக இஸ்மாயீல் (அலை) அவர்கள் திகழ்கின்றார்கள்.
மொத்தத்தில் மனைவியும் மக்களும் இப்ராஹீம் நபியின் தியாகத்திற்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் சிறந்த குடும்பமாக விளங்கினர்.
குடும்பத்தில் ஒருவர் கொள்கைக்காக உழைக்கும் போது அவர் சில சோதனைகளைச் சந்திப்பார். ஏன்? சிறைவாசம் கூடச் சந்திப்பார். அல்லது அடி, உதை வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவ்வளவு தான்! அந்தக் குடும்பம் அவரை வார்த்தைக் கணைகளால் கொன்று சாகடித்து விடும். உனக்கு இது தேவை தானா? என்று கேட்டு அவரது உள்ளத்தை நோகடித்து விடும். தவ்ஹீதுக் குடும்பமாக இருந்தாலும் இதில் விதிவிலக்கில்லை. தவ்ஹீதுக் குடும்பங்களின் நிலையே இதுவென்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் கொள்கையை ஏற்காத குடும்பமாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.
எனவே நமது குடும்பத்தில் கொள்கைச் சகோதரர் ஒருவர், கொள்கைக்காக ஒரு பாதிப்பை அடைந்தால் அதை ஒரு பாக்கியமாகக் கருதி அதில் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவரது சோதனையில் நாம் துணை நிற்க வேண்டும். இப்படித் தான் இப்ராஹீம் நபியின் மனைவி, மக்கள் கொள்கைக்கான சோதனையில் பங்கெடுத்தனர்.
இன்று இறைவனின் அருளால் ஒரு சில அழைப்பாளர்களின் துணைவியர் இது போன்ற தியாகத்தைச் செய்ய முன்வந்ததால் தான் தமிழகத்தில் தவ்ஹீதுக்குத் தளமும் ஒரு களமும் உருவானது. இந்தப் பயணத்தில் இருப்போருக்கு இப்ராஹீம் நபியின் மனைவி, மக்களைப் போன்று ஒத்துழைப்போம்; உறுதுணையாக இருப்போம்.