தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா?
முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளி வாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.
அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமே என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
இவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியை பேசுவதால் தாம் தான் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.
படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் மட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா? பண்டிதர்களும் பகுத்தறிவாதிகளும் கூட இப்படித்தான் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி. இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.
எல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விட தாழ்ந்ததுமில்லை, உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விட சிறந்தவர்களுமல்லர், தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.
தமிழகத்தில் பிறந்து தமிழ் மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும் சுற்றத்தாரும் நம்மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழி வெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.
தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்டே அந்த சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதுவதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.
மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் ”அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது” என்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.
இறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விட சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத் தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா? இல்லவே இல்லை.
நபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட பல்லாயிரக் கணக்கான தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.
எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.
(திருக்குர்ஆன் 14:4)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகத்திற்கு முன் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் பேசும் தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில் தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
கடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
கடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளை தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
எந்த மொழியும் உயர்ந்த மொழியில்லை என்றால் பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து தடவை கூறப்படும் பாங்கு ஏன் அரபு மொழியில் அமைந்துள்ளது? தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே? என்ற கேள்விக்கு என்ன விடை என்பதை பார்ப்போம்.
இதற்குக் காரணம் அரபு மொழி தான் தேவமொழி என்பதன்று. தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு உலகமெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே காரணம். இத்தகைய உலக ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு மோழியில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்க வேண்டும்.
அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்… என்ற பாங்கை அதே பொருளுடைய வேறு அரபு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறலாமா? என்றால் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.
நபிகள் நாயகம் எதைக் கற்றுத் தந்தார்களோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூற வேண்டுமே தவிர அரபு மொழியில் இதற்கு நிகரான எந்த வார்த்தையையும் கூறிவிட முடியாது. அரபு மொழிக்குக் கூடுதல் சிறப்பு உண்டு என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அவரவர் தாய் மொழியில் தொழுகைக்கான அழைப்பைக் கூறலாம் என்றால் அதனால் குழப்பங்கள் தான் ஏற்படும். உலக ஒருமைப்பாடு சிதைந்து விடும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது. அவர் இது வரை கேள்விப்பட்டிராத வார்த்தைகளை இப்போது தான் கேள்விப்படுகிறார். இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாக அவர் எண்ண மாட்டார். தொழுகை அழைப்பு விடப்படுவதாகவும் புரிந்து கொள்ள மாட்டார்.
உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக தொழுகைக்கான அழைப்பு அமைந்திருந்தால் எந்த மொழியினரும் தொழுகைக்கான அழைப்பை அறிந்து கொள்வர். பள்ளிவாசலை அடையாளம் கண்டு கொள்வர். தொழுகை எனும் கடமையை நிறைவேற்ற இது வாய்ப்பாக அமையும்.
இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில் அமைந்துள்ளது. வங்காள மொழி தான் இந்திய மொழிகளில் சிறந்த மொழி என்பதற்காக இவ்வாறு அமைக்கவில்லை. மாறாக அதை இயற்றியவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்காகவும் அதன் கருத்துக்காகவும் தான் தேசிய கீதமாக்கப்பட்டது.
தமிழில் அதை விடச் சிறந்த கவிதைகளை இன்றைக்கும் கூட எழுத முடியும். ஆனாலும் தேசிய கீதத்தை நாம் மாற்றுவதில்லை. ஏதாவது ஒரு பாடலைத் தான் தேசிய கீதமாக ஆக்க முடியும். எந்த மொழியில் அது அமைந்தாலும் மற்ற மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படத் தான் செய்யும். எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு வங்காள மொழி தேசிய கீதத்தை அனைவரும் ஏற்றிருக்கிறோம்.
தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அதன் பொருள் தெரியாது. ஆனாலும் அப்பாடல் இசைக்கப்படும் போது தேசிய கீதம் பாடப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.
இது போல் தான் உலகளாவிய ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் அல்லாஹு அக்பர் எனத் தொடங்கும் பாங்கு சொல்லப்படுகிறது. அதன் பொருள் எல்லா முஸ்லிம்களுக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் தொழுகைக்காக அழைப்பு விடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கத் தான் அரபு மொழியில் அழைப்பு விடுகின்றனர்.
நிச்சயமாக அரபு மொழி உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காக செய்யப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்திருந்தால் தமிழில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்கும்.
ஒருமைப்பாட்டிற்காக எத்தனையோ விஷயங்களில் நாம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இராணுவத்தினர், காவல் துறையினர் பயிற்சியின் போது லெப்ட், ரைட் எனக் கூறி நடைபோடுகின்றனர். வலது, இடது எனக் கூற வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. பல்வேறு மொழியினர் வாழும் நாட்டில் கட்டளைகளை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழி என்பது இதன் கருத்தன்று.
இது போலவே அரபு மொழியில் பாங்கு கூறப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம், நாடு, குலம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது. அரபு மொழி மற்ற மொழிகளை விட சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏனைய மொழிகளை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை என்றால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு அன்னிய மொழியாக இருக்கும் அரபு மொழியில் பெயர் சூட்டிக் கொள்ளக் காரணம் என்ன? என்பது மற்றொரு சந்தேகம்.
இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூசுப், யூனுஸ், தாவூத், சுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.
இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய் மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.
மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச்சொல் அன்று.
நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.
நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இந்தோனேசிய முஸ்லிம்கள் சுகர்னோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களை தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.
அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?
சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன.
இஸ்லாமிய மார்க்கம் சாதி வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.
நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்த சாதி என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள். ஆனால் நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் சாதி என்ன என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையை நாடித் தான் தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.
இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.