தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை
இவ்வசனத்தில் (2:233) தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.
தங்களது குழந்தைகளுக்குப் பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பது மதக் கட்டளையாக இஸ்லாத்தில் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. வேறு எந்த மதத்திலும் இது குறித்து கட்டளை எதுவும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் நவீன காலத்தில் புட்டிப்பால் குடித்தே குழந்தைகள் வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தாய்மார்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற உண்மையும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களைப் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.