தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா?
ஒரு தவ்ஹீதுவாதி ஓரளவு வசதி படைத்தவர். அவர் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? அல்லது ஏழையைத் திருமணம் செய்ய வேண்டுமா? மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்கின்றார். என்றாலும் பெண் வீட்டில் பெண்ணுக்கு அதிகம் நகை போடுகின்றார்கள். இது சரியா?
பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்குத் தடையோ அல்லது ஏழைப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ மார்க்கத்தில் இல்லை.
ஆனால் அந்தப் பெண் வசதியுள்ளவள் என்பதற்காக அவளைத் திருமணம் செய்வதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள். (பார்க்க புகாரி 5090) பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் மார்க்கம் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்)
அல்குர்ஆன் 2:221
இந்த வசனத்திலும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் போது அவளது கொள்கையைத் தான் பார்க்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்று தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் கூட மார்க்கத்தை முன்னிறுத்தாமல் குடும்பம், செல்வம், அழகு போன்றவற்றிற்கே முன்னுரிமை அளிக்கின்றார்கள்.
ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எத்தனையோ பெண்கள் மாப்பிள்ளை கிடைக்காமல் காத்துக் கிடக்கின்றனர். இவர்களையெல்லாம் விட்டு விட்டு தர்காவுக்குச் செல்லும் ஒரு பெண்ணைப் போய் திருமணம் செய்து கொள்கின்றனர் என்றால் இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையையும் காற்றில் பறக்க விடுகின்றனர் என்பது தான் அர்த்தம்.
கேள்வி – பதில் – ஏகத்துவம், மார்ச் 2005