தவ்ஹீது பிரச்சாரம்
தவ்ஹீது பிரச்சாரத்தில் கால் பதித்து கால் நூற்றாண்டைத் தாண்டி விட்டாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை நாம் கண்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அல்லாஹ்வின் கிருபையால் இந்த இயக்கம் ஆல் போல் தழைத்து விட்டது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பேரியக்கம் கிளைகளைக் கண்டிருக்கின்றது. இப்படி ஒரு வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்ற அதே வேளையில் ஒரு பெருங் கவலையும் நம்மை ஆட்கொள்கின்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் சர்வ சாதாரணமாக வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்கின்றனர். பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்கின்றனர். இதை ஒரு பாவமாகக் கூடக் கருதவில்லை.
சிலர் பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் தாங்கள் மணமுடிக்கும் பெண்ணுடைய வீட்டில் வைக்கும் விருந்துகளைக் கண்டு கொள்வதில்லை. நாங்கள் மாப்பிள்ளை வீட்டு சார்பில் விருந்து வைத்துக் கொண்டோம் பெண் வீட்டுக்காரர்கள் அவர்கள் சார்பில் விருந்து வைத்துக் கொண்டார்கள். நாங்கள் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை’ என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள்.
ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கு உரமாகவும் ஊனாகவும் அமைந்தது தான் வரதட்சணை ஒழிப்புப் பிரச்சாரமாகும். பெண் வீட்டுக்காரர்களைப் பிடித்து உலுக்குவதும், அவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதும் வரதட்சணை என்ற கொடுமை தான்.
ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்றால்,
பெண்ணுக்கு நகை கொடுக்க வேண்டும்
தொகை கொடுக்க வேண்டும்
சீர் வரிசைகள் கொடுக்க வேண்டும்
விருந்து வைக்க வேண்டும்
இவையெல்லாம் சமூக நிர்ப்பந்தங்கள். பெண் வீட்டுக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட பாரங்கள். எழுதப்படாமல் அவர்கள் தலை மீது சுமத்தப்பட்ட பாறைகள். இந்த நிர்ப்பந்தங்களை சுட்டெறிக்கப் புறப்பட்ட தீப்பந்தம் தான் தவ்ஹீத் ஜமாஅத்! சமூக நிர்ப்பந்தம் என்ற விலங்கை உடைக்க வந்த விடுதலை உணர்வு தான் தவ்ஹீத் ஜமாஅத்.
பெண் வீட்டுக்காரர்களின் கைகளில் போடப்பட்ட விருந்து என்ற விலங்கை, கை காப்பை உடைக்க வேண்டிய தவ்ஹீதுவாதிகள் ஊமையாகி நிற்கின்றனர்.
விருந்து வைக்கக் கூடாது என்று நாங்கள் பெண் வீட்டில் சொல்லி விட்டோம் அவர்கள் கேட்கவில்லை’ என்ற சொத்தையான பதிலைத் தருகின்றனர். ஒரு காலத்தில் பெண் வீட்டார் வரதட்சணை தரவில்லை என்றால் அதற்காக திருமணத்தையே முறித்தனர். கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தினர். அசத்தியத்தில் அப்படி ஒரு துணிச்சல்!
ஆனால் இன்று அதே பெண் வீட்டில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக, ஒரு சமூக நிர்ப்பந்தத்தை ஒழிப்பதற்காக, பெண் வீட்டில் விருந்து வைத்தால் உங்கள் பெண்ணே வேண்டாம்’ என்று சொல்வதற்கு தவ்ஹீதுவாதிகளுக்குத் துணிச்சல் இல்லை தெம்பில்லை!
அவர்கள் வைக்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது?’ என்ற அசட்டுத்தனமான, அலட்சியமான பதிலைத் தருகிறார்கள். அசத்தியத்தில் இருந்த அந்தத் துணிச்சல் இன்று சத்தியத்தில் இல்லாமல் போய் விட்டது.
இதில் வேதனை என்னவெனில், நபிவழித் திருமணம் என்று சொல்லிக் கொண்டு, மண்டபம், விருந்து போன்ற அனைத்து செலவுகளிலும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இதை இரு வீட்டார் அழைப்பு என்று வேறு அழைப்பிதழில் வெட்கமில்லாமல் போட்டுக் கொள்கின்றனர்.
இத்தகைய திருமணங்களை நடத்தும் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார், நாங்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக்கும் திருமண சபைகள், விருந்து வைபவங்கள் போன்றவற்றில் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெட்கமின்றி கலந்து கொண்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு வருகின்றனர்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
அல்குர்ஆன் 4:140
இதுபோன்ற ஈனச் செயலைத் தான் இந்த வசனம் கண்டிக்கின்றது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.
ஏதோ, தவ்ஹீதில் அடியெடுத்து வைத்த புதிய தலைமுறையினர் இந்தத் தவறைச் செய்தால் கூட, தவறுதலாக நடந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். தவ்ஹீதில் பழுத்த பழங்கள் இப்படி அழுகிப் போவதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?
திருமணத்தில் தான் தவ்ஹீதுவாதிகள் இப்படித் தடம் புரள்கின்றனர் என்றால் மரண விஷயத்திலும் இது போன்று தடம் புரண்டு விடுகின்றனர்.
தவ்ஹீதுவாதிகளின் குடும்பத்தில் உறவினர் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸா தொழுகையில் எந்த விசாரணையும் இன்றி கலந்து கொள்கின்றனர். இறந்தவரின் கொள்கை என்ன? அவர் ஏகத்துவவாதியா? அல்லது இணை வைத்தவரா? என்று விசாரணை கமிஷன் அமைக்கத் தேவையில்லை. இறந்தவர் தவ்ஹீதுக் கொள்கைக்கு எதிர்ப்பாக இருந்தாரா? மரணம் வரை தர்ஹாவுக்குச் சென்றவரா? மவ்லிது ஓதியவரா? என்ற வெளிப்படைகளை கூடப் பார்க்காமல் போய் ஜனாஸாவில் கலந்து கொள்கின்றனர்.
சில கட்டங்களில் இறந்தவர் தவ்ஹீதுவாதி! ஆனால் தொழுவிப்பவர் இணை வைப்பாளர்! இதுபோன்ற தொழுகைகளிலும் உறுத்தல் இல்லாமல் தொழுது விட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் ஐவேளை தொழுகையிலும் இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுகின்றனர்.
இது போன்றவர்கள் நமது அமைப்பில் பங்கெடுப்பார்களானால் அவர்கள் பச்சைப் பயிர்கள் அல்லர்! பகிரங்கக் களைகள் ஆவர். நெல் மணிகள் அல்லர்! சாவிகளும் சருகுகளும் ஆவர். இவர்களால் இயக்கம் அழியுமே தவிர ஆல் போல் தழைக்காது.
இந்தக் களைகளை இனங்கண்டு பறிப்போமாக! அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் தவ்ஹீதுப் பயிரைக் காப்போமாக! பொறுப்பேற்றிருக்கும் புது நிர்வாகம் இதில் ஒரு புது ரத்தம் பாய்ச்சட்டுமாக!