தவாஃபுக்காக உளூச் செய்ய வேண்டுமா?
தவாஃபுக்காக உளூச் செய்தல்
தவாஃபுக்காக உளூச் செய்தல் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன.
தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள். கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும். முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள் என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.