நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்
கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
அந்தப் பிராணிகள் யாருடைய வயலில் மேய்ந்தாலும் அதை விரட்டக் கூடாது; அதன் மேல் பாரம் ஏற்றக் கூடாது; பால் கறக்கக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத சட்டங்கள் உள்ளன. சில நாட்களில் அப்பிராணிகள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் பலியாகப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டே அதற்கு தெய்வத் தன்மை அளிக்கின்றனர்.
இது போன்ற நம்பிக்கைகளை இவ்வசனங்கள் தகர்த்து எறிகின்றன.
இறைவனுக்காக அறுத்துப் பலியிட வாங்கப்பட்ட பிராணிகளை, அறுத்துப் பலியிடுவதற்கு முன் வழக்கம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இவ்வசனம் (22:33) அனுமதிக்கிறது.
ஆடு, மாடு போன்றவைகளை இறைவனுக்காகப் பலியிடுவதற்காகவோ, குர்பானி கொடுப்பதற்காகவோ நாம் வாங்கி வைத்திருந்தால் அதற்கான நேரம் வரும்வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் லாபத்தை அடைந்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கின்ற பால் போன்றவற்றைப் பருகலாம். அதன் மேல் ஏறிச் செல்லலாம் என்பன போன்ற சட்டங்கள் இவ்வசனத்தில் இருந்து கிடைக்கின்றது.
இறைவனுக்காக நேர்ச்சை செய்து யாருக்கும் பலனில்லாமல் பிராணிகள் விடப்படுவதை இஸ்லாம் மறுக்கிறது. இறைவனுக்காக ஒரு பிராணியை அர்ப்பணிக்க முடிவு செய்தால் அதை ஏழைகள் பயன்பெறும் வகையில் விநியோகித்து விட வேண்டும். அது வரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கும் பயன்படாத வகையில் பிராணிகளை உலகப் பொதுஉடமையாக விட்டு விடக்கூடாது என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது