*தவக்குல் வைப்பதும் வணக்கமே!*
*தனது இயலாமையை ஒப்புக் கொண்டு அடுத்தவர் மீது நம்பிக்கை கொண்டு அவரிடமே தனது காரியங்களை ஒப்படைத்து விடுவது தவக்குல் ஆகும்*.
தனக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆற்றல்களையும், வசதிகளையும் பயன்படுத்திய பின்னரும் ஒரு காரியம் கைகூடாத போது தன்னைப் போன்ற *மனிதர்களால் அந்தக் காரியத்தைச் செய்திட முடியாது என்பதை உணர்ந்து தனக்கும் மேலான சக்தி பெற்றவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல்*.
என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் *அவனையே சார்ந்திருங்கள்*! என்று மூஸா கூறினார் (10:84)
அல்குர்ஆன் 3:122, 3:159, 3:160, 5:11, 5:23, 8:2, 8:49, 8:61, 9:51, 12:67, 14:11, 11:123, 14:12, 16:42, 16:99, 25:58, 29:59, 39:38, 42:36, 58:10, 64:13 ஆகிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் யார் மீதும் தவக்குல் வைக்கலாகாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். *இறைவனல்லாத எவர் மீதும் தவக்குல் வைப்பவர்கள் ஈமான் இல்லாதவர்கள்; இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்* என்றும் தெளிவாக்குகின்றான்.
பசியைப் போக்கிக் கொள்ள உழைக்காமல் படுக்கையில் படுத்துக் கொண்டு, அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கூறுவதற்குப் பெயர் தவக்குல் அல்ல. *செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல்* என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு, எந்தத் தயாரிப்பும் இன்றி, ஹஜ்ஜுக்கு வந்து சிலர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டித்து (*ஹஜ்ஜுடைய காலங்களில் வியாபாரம் செய்வதன் மூலம்) உங்கள் இறைவனின் அருட்கொடைகளைத் தேடிக் கொள்வது தவறில்லை*. (அல்குர்ஆன் 2:19) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1770, 2050, 2098, 4519
இதன் மூலம் தவக்குல் என்பதன் பொருளை நாம் அறியலாம். ஒருவன் திருமணம் செய்கிறான். தனக்குச் சந்ததி வேண்டுமென்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறான்.
அதன் பிறகும் சந்ததி உருவாகவில்லை எனும் போது *மருத்துவர்களை அணுகி, தன் உடலைச் சோதனை செய்கிறான். செய்ய வேண்டிய அனைத்தையும் மனித சக்திக்கு உட்பட்டு செய்து பார்த்த பின் இறைவனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் போது அவன் அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாகின்றான்*.
மற்றொருவன் இந்தக் கட்டத்தை அடையும் போது என்றைக்கோ இறந்து போய் விட்ட, தனக்கே ஒரு குழந்தையைச் சுயமாக உருவாக்கிக் கொள்ளச் சக்தியற்றவர்களிடம் போய் அவ்லியாவே! நீங்கள் தான் எனக்குப் பிள்ளை தர வேண்டும் என்று வேண்டுகின்றான் என்றால் அவனது தவக்குல் அல்லாஹ்வின் மீது இல்லை. (5:23, 10:84) வசனங்களின் படி இஸ்லாத்தை விட்டு அவன் வெளியேறி விடுகிறான். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறி விடுகிறான்.
தவக்குல் வைக்க வேண்டுமானால், அதற்கு மிக முக்கியமான தகுதி ஒன்று வைக்கப்படுபவரிடம் இருந்தாக வேண்டும். அந்தத் தகுதி எவரிடம் இல்லையோ, அவர் மீது தவக்குல் வைக்க முடியாது. அதாவது *எவர் மீது தவக்குல் வைக்கப்படுகின்றதோ, அவர் உயிருடனிருக்க வேண்டும். உயிருடனிருப்பது மட்டும் கூட போதாது. ஒருக்காலும் அவருக்கு மரணமே ஏற்படாது இருக்க வேண்டும். இத்தன்மை கொண்டவரிடமே தவக்குல் வைக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்*.
*மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக*! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (25:58)
இந்தத் தகுதி அல்லாஹ்வைத் தவிர, வேறு எவருக்கேனும் இருக்க முடியுமா? பச்சிளம் பாலகனுக்குப் புரியும் விதமாக வல்ல அல்லாஹ் சொல்லித் தந்த பின்னரும் இறந்து போனவர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் மீது தவக்குல் வைக்க சிலர் துணிந்து விடுகிறார்கள் என்றால் இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
*இய்யாக நஃபுது* (உன்னையே வணங்குகிறோம்)* என்று அன்றாடம் பலமுறை எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏதாவது அர்த்தமிருக்கின்றதா?
பைத்தியம் பிடித்து, சிலர் சமாதிகளில் சரணடைவார்கள். பைத்தியம் அங்கே தெளியும் என்பர். பைத்தியத்தைக் குணப்படுத்தும் வல்லமை அந்தச் சமாதிகளுக்கு உண்டென்று நம்புவர்.
இவர்கள் மனநோய்க்கு ஆளானதும், பைத்தியம் பிடித்து அலைவதும், ஷைத்தானின் வலையில் இவர்கள் விழுவதும் எதனால்? எவர்கள் *தங்களின் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ் மீது தவக்குல் வைக்கத் தவறினார்களோ அவர்களே பைத்தியத்துக்கு ஆளாகின்றனர்*.
குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! *நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர்* மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது. (16:98,99,100)
வந்துவிட்ட மனநோய்க்காக அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்த மனநோய் வந்ததற்கு காரணமே அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்காமல் எவர் மீதும், எதன் மீதும் தவக்குல் வைத்தது தான் என்பதை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
*உன்னை மட்டுமே வணங்குவோம்* என்று நாம் உறுதிமொழி எடுத்துள்ளதால் தவக்குல் எனும் இவ்வணக்கத்தை எவருக்கும் செய்ய மாட்டோம் என்று எவர் நம்புகிறாரோ, அதன் படி நடக்கிறாரோ, அவர் தான் *இய்யாக நஃபுது (உன்னையே வணங்குகிறோம்)* என்ற உறுதிமொழியை அர்த்தமுள்ளதாக ஆக்கியவராவார்.