தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா ?
கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்?
மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3358
மனிதன் மரணித்த பின் அவருக்கும், இவ்வுலகுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(திருக்குர்ஆன்:23:99,100)
மரணித்தவருக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா என்ற நமது நூலில் காணலாம். மேலும் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.
செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் “இவர் ஒரு மகானா” என்று கூறிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.
இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதையும், மற்றும் குழந்தையில்லாமலேயே மரணித்து விடுவதையும் நாம் பார்க்கிறோம்.
ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன. இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் ஆதாரமாக இருக்கிறது. ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.
ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறிவிடும். அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
(திருக்குர்ஆன்:7:34)
‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
(திருக்குர்ஆன்:10:49)
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
(திருக்குர்ஆன்:16:61)
ஒவ்வொரு காரியம் நிகழ்வதற்கும் அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயித்து வைத்துள்ளான். அந்த நேரம் வந்ததும் அது நிகழ்கிறது. தர்கா வழிபாடு பாவம்; அது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரும், இன்னும் பலரும் கருதுகின்றனர். இவர்களுக்கும் காரியங்கள் கைகூடுகின்றன.
தர்கா வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பிறப்பது போல் அதை எதிர்ப்பவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. தர்கா வழிபாடு செய்யும் சிலர் செல்வந்தர்களாக ஆவது போல் அதை எதிர்ப்பவர்களிலும் சிலர் செல்வந்தர்களாக ஆகின்றனர். காரணம் அதற்கான நேரம் வந்து விட்டது தான். தர்கா வழிபாடு செய்வோர் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
எனவே மகான்கள் உலகில் உயிரோடு வாழும் போதும் அவர்களால் அற்புதம் செய்ய முடியாது. மரணித்து விட்டால் சாதாரண காரியங்களைக் கூட அவர்கள் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.