தரம் தாழ்ந்த உலகம்
———————————-
மறுமை வாழ்க்கையோடு எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உலக வாழ்க்கை என்பது தரம் குறைந்தது; அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கீழானது.
இப்படியான வாழ்வில் நன்றாக இருப்பதற்காக மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்வது மிகப்பெரும் முட்டாள்தனம்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ஆலியா வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்? என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’ என்று கேட்டார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும்போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’ என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5664)
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த, –அதாவது சுட்டு– விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)
நூல்: முஸ்லிம் 5490
————————
ஏகத்துவம்