தனியாகத் தொழும் போது சப்தமாக ஓதலாமா?
ஃபஜ்ர், மக்ரிப், மற்றும் இஷாத் தொழுகைகளை தனியாகத் தொழ நேர்ந்தால் சப்தமிட்டு ஓத வேண்டுமா? அல்லது சப்தமின்றி ஓத வேண்டுமா?
பொதுவாக தொழுகைகளைத் தனியே தொழும்போது சற்று சத்தமிட்டு ஓதுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ருத் தொழுகையைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில சமயம் இரவின் ஆரம்பத்திலும், சில சமயம் அதன் இறுதியிலும் வித்ருத் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். அவர்கள் ஓதும் முறை எவ்வாறு இருந்தது? அவர்கள் மவுனமாக ஓதுவார்களா? அல்லது சப்தமிட்டு ஓதுவார்களா? என்று வினவினேன். அதற்கு இவ்விரண்டு முறையையும் கடைப்பிடிப்பார்கள். சில சமயம் வாய்க்குள்ளாகவும், சில சமயம் சப்தமாகவும் ஓதுவார்கள். (குளிப்புக் கடமையாக இருக்கும் போது) சில சமயம் குளித்து விட்டும், சில சமயம் உளூச் செய்து விட்டும் உறங்குவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ கைஸ்
நூல் : திர்மிதி 312
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவு வெளியே சென்றார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது சப்தத்தைத் தாழ்த்தி தொழுது கொண்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகில் சென்ற போது அவர்கள் தமது சப்தத்தை உயர்த்தி தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒன்று கூடியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ரே! நான் உங்களுக்கு அருகில் வந்த போது நீங்கள் சப்தத்தைத் தாழ்த்தி தொழுது கொண்டிருந்தீர்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! நான் யாருடன் இரகசியமாக உரையாடினேனோ அ(ந்த இறை)வனுக்கு செவியுறச் செய்து விட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நான் உங்களுக்கு அருகில் வந்தேன். நீங்கள் உங்கள் சப்தத்தை உயர்த்தி தொழுது கொண்டிருந்தீர்கள் என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அரைகுறையான தூக்கத்திலிருப்பவர்களை விழிக்கச் செய்கின்றேன். ஷைத்தானை விரட்டி விடுகின்றேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபூபக்கரே! உங்கள் சப்தத்தை சற்று உயர்த்திக் கொள்ளுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடமும், உமரே! உங்கள் சப்தத்தை சற்று தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று உமர் (ரலி) அவர்களிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)
நூல் : திர்மிதி 447
எனவே நாம் தனியாகத் தொழுதாலும் அதில் சற்று சத்தமிட்டு ஓதுவதற்கும் சப்தமின்றி ஓதுவதற்கும் மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
அதே நேரத்தில் நமக்கு அருகில் மற்றவர்கள் தொழுது கொண்டிருந்தால் அப்போது சப்தமிட்டு ஓதுவது மற்றவர்களுக்கு இடஞ்சலை ஏற்படுத்தும். எனவே அப்போது சப்தமின்றி ஓத வேண்டும்.