தனிமையில் வரம்பு மீறுவோரின் மறுமை நிலை
மக்களிடம் மரியாதையோடு இருக்க வேண்டுமென அவர்களின் முன் மட்டும் நல்ல விதமாக நடந்து விட்டு, மறைவாக இருக்கும் போது மார்க்கத்தின் வரம்புகளை மீறுவோர் மறுமையில் மோசமான நிலையில் மாட்டிக் கொள்வார்கள். குற்றவாளிகளாய் இருப்பார்கள். அவர்களின் நன்மையான காரியங்களை அல்லாஹ் அற்பமாக அலட்சியப் படுத்திவிடுவான்.
பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 6:120
“அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 4634
‘‘மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தில் திஹாமா மலையளவு நன்மைகளைக் கொண்ட கூட்டத்தினர் வருவார்கள் என்பதை நானறிவேன். மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ் அவர்களுடைய நன்மைகளை சிதறும் தூசுகளாக ஆக்கிவிடுவான்’’ என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அதற்கு சவ்பான் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவர்களைப் பற்றி அறியாத நிலையில் அவர்களில் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்; எங்களுக்கு சொல்லுங்கள்’’ என்று கூறினார்.
அதற்கு, ‘‘அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களுடைய சகோதரர்கள்; உங்களுடைய இனத்தை சார்ந்தவர்கள். உங்களைப் போன்று இரவில் (வணக்கத்தில்) ஈடுபடுபவர்கள். ஆனால், அவர்கள் தனித்திருக்கும் போது (மற்றவர்கள் முன்) எவற்றை விட்டும் விலகி இருந்தார்களோ அத்தகைய அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட காரியங்களை செய்யும் கூட்டத்தினர் ஆவர்’’ என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4245
அன்பார்ந்த சகோதரர்களே! எவரும் இல்லாத தருணத்திலும் கூட ஏக இறைவனை நினைத்து நம்மை நெறிப்படுத்திக் கொள்ளும் போது, பிறர் முன் இருக்கும் நேரத்திலும் தூய முறையில் பயணிக்கும் பக்குவத்தைப் பெற்றிடுவோம். இத்தகு நற்புரிதலையும், நல்ல மாற்றத்தையும் நோன்பு மூலம் பெற்று ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவனாக!