தண்டனைகள்
பொறுப்பை நிறைவேற்றாதவருக்குரிய தண்டனை
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் 3729
அநீதியிழைத்தவருக்குரிய தண்டனை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல் : முஸ்லிம் 5034
நல்ல செயல் செய்யாதவருக்குரிய தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப் பட்டு, நரகத்தில் ஒரு முறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!” என்று பதிலளிப்பார்.
அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை” என்று கூறுவார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : முஸ்லிம் 5407
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை விட்டும் தடுக்க கூடியவனுக்குரிய தண்டனை
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
வீண் விவாதங்களில் மூழ்கியோருக்குரிய தண்டனை
உங்களுக்கு முன் சென்றோரைப் போல் (நீங்களும் இருக்கிறீர்கள்.) அவர்கள் உங்களை விட வலிமைமிக்கோராகவும், அதிக மக்கட் செல்வமும் பொருட் செல்வமும் உடையோராகவும் இருந்தனர். தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை அனுபவித்தனர். உங்களுக்கு முன் சென்றோர் தமது பாக்கியத்தை அனுபவித்தது போல் உங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். (வீண் விவாதங்களில்) மூழ்கியோரைப் போல் நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இவர்களது செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விட்டன. இவர்கள் தாம் இழப்பை அடைந்தவர்கள்.
அல்குர்ஆன் 9: 69
அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவோருக்குரிய தண்டனை
அல்லாஹ் கூறாத ஒன்றை கூறியதாக யாராவது கூறினால் அவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என்பதை கீழ்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.
“இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது’ என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (இது) அற்பமான வசதிகள். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 16: 116.117
மறுமையை நம்பாமல் இருப்பவருக்குரிய தண்டனை
மறுமையை நம்பாமல் இருப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 17: 10
இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்குரிய தண்டனை
“என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “‘அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான். தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
அல்குர்ஆன் 20: 125-127
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவனுக்குரிய தண்டனை
பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.
“இருந்தாலும் இருக்கும்’ என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?
செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. மறுமையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை கீழ்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகிறது.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர.
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். “அவனே பொய்யன்” என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். “அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்” என்பது ஐந்தாவதாகும்.
அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்) அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு. இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு” என்று கூறியிருக்கக் கூடாதா? இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.
அல்குர்ஆன் 24: 4-14
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர்.அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 24: 23
அபுல்காசிம் (முஹம்மத் – ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபசாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 3416
வெட்கக்கேடான செயல், பிறரிடத்தில் பரவ வேண்டும் என விரும்புவருக்குரிய தண்டனை
வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 24: 19
கடமையான தொழுகையை விட்டும் தூங்குதல் மற்றும் குர்ஆனை புறக்கணித்தல்
நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல் : புகாரி 1143
பொய் சொல்லுதல்
அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன். அவர் பெரும் பொய்யர்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல் : புகாரி 1143
விபச்சாரம்
அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூட்டின் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் “இவர்கள் யார்?’ எனக் கேட்டேன். அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல் : புகாரி 1143
கனீமத் பொருளில் வரம்பு மீறுதல்
கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் “இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்’ என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி “இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)” என்றார்கள். பிறகு (என்னிடம்) “கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, “இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்’ என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!” என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று (மக்களிடையே) அறிவித்தேன்.
அறிவிப்பவர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி)
நூல் : முஸ்லிம் 182
கோள் சொல்லுதல்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, “இவர்கள் இருவரும் பெரிய (பாவச்) செயலுக்காக வேதனை செய்யப்படவில்லை” என்று சொல்லிவிட்டு, “ஆம்! கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 216
சுத்தம் செய்யாதிருத்தல்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக வேதனை செய்யப்படவில்லை” என்று சொல்லிவிட்டு, “ஆம்! இவ்விருவரில் ஒருவரோ, தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 216
பிரார்த்தனை செய்வோம்!
இது போன்ற எண்ணற்ற செயல்களினால் மறுமையில் கிடைக்கும் தண்டனையிலிருந்து இறைனிடம் பாதுகாப்பு தேடுவோம்! இதற்காக பல்வேறு பிரார்த்தனைகளை இறைவனும் இறைதூதரும் நமக்கு கற்றுத் தருகிறார்கள். அவற்றில் சிலவற்றை காண்போம்!
“அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’
இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன