தடை செய்யப்பட்ட காரியங்கள் 03
- இருபெருநாட்களில் நோன்பு நோற்க தடை
- வட்டி தடை
- உணவுப் பொருட்கள் கையில் கிடைக்கும் முன் விற்பனை செய்யக்கூடாது
- பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது
- தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது
- தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது
- அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது
- இடுப்பில் கைவைத்து தொழக்கூடாது
- பட்டாடை அனைத்தும் ஆண்களுக்கு தடை
1.இருபெருநாட்களில் நோன்பு நோற்க தடை
இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர்.
அவை:
நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் (ஈதுல் ஃபித்ர்) தினமும்,
குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் (ஈதுல் அள்ஹா) தினமும் ஆகும்.
அறிவிப்பவர் : உமர் (ரலி),
நூல் : புகாரி (1990)
2. வட்டி தடை
வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி),
நூல் :புகாரி (2086)
3. உணவுப் பொருட்கள் கையில் கிடைக்கும் முன் விற்பனை செய்யக்கூடாது
ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக அவரது கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் :புகாரி (2126)
4. பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் “பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.’ (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி 1486, 2184, 2194, முஸ்லிம் 3078
5. தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதே போல்) அவர் தம் வலப் புறமாக வும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்துவிட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : புகாரி 416, 414, 409, 411, முஸ்லிம் 955
6. தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது
நான் என் தந்தை (ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோர்த்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅத்,
நூல்கள் : புகாரி 790, முஸ்லிம் 931
7. அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது
ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, “நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரி 6270, 6269, 911, முஸ்லிம் 4391
8. இடுப்பில் கைவைத்து தொழக்கூடாது
ஒரு மனிதர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : புகாரி 1220, 1219, முஸ்லிம் 948
9. பட்டாடை அனைத்தும் ஆண்களுக்கு தடை
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (ச்செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். . . . வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி),
நூல்கள் : புகாரி 1239, 5175, 5235, 5650 ,5863, முஸ்லிம் 4194