தடை செய்யப்பட்ட காரியங்கள் 02
- பிராணிகளை அம்பு எய்யும் இலக்காக ஆக்கக்கூடாது.
- குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் திருமணம் கூடாது
- அடுத்தவர்களின் உணவை அவரசப்பட்டு சாப்பிடக்கூடாது
- அடுத்தவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பெண் பேசக்கூடாது.
- அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு விலை பேசக்கூடாது
- வாங்கும் எண்ணம் இல்லாமல் ஏலத்தில் விலை ஏற்றக்கூடாது
- பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது
- தொடர் நோன்பிற்கு தடை
- வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது
- மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு ஆடை அணியக் கூடாது
- பிராணிகளை அம்பு எய்யும் இலக்காக ஆக்கக்கூடாது
“விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.
நூல் : புகாரி (5513)
2. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் திருமணம் கூடாது
கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம் கூடாது என்று தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் : புகாரி (4216)
குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டு சில நாட்கள் மட்டும் பெண்களிடம் உறவு கொண்டுவிட்டு பின்னர் அப்பெண்ணை பிரிந்துவிடும் பழக்கம் அன்றைய கால அரபியர்களிடம் இருந்தது. அதை நபிகளார் தடைசெய்தார்கள்.
3. அடுத்தவர்களின் உணவை அவரசப்பட்டு சாப்பிடக்கூடாது
ஒருவர் தன் சகோதரருக்கு அனுமதி தந்தாலே தவிர சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்
இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (2490)
4. அடுத்தவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பெண் பேசக்கூடாது.
ஒருவர் தம் சகோதரன் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண்பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை; அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (5142)
5. அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு விலை பேசக்கூடாது
ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (2139)
6. வாங்கும் எண்ணம் இல்லாமல் ஏலத்தில் விலை ஏற்றக்கூடாது
வாங்கும் நோக்கமின்றி விலை உயர்த்துவதற்காக விலையை அதிகம் கேட்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் :புகாரி (2142)
7. பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் “பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.’ (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி 1486, 2184, 2194, முஸ்லிம் 3078
8. தொடர் நோன்பிற்கு தடை
நபி (ஸல்) அவர்கள் (நோன்பு துறக்காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்;
மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், “நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரி 1922, 1962, முஸ்லிம் 2010
9. வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : புகாரி 1985, முஸ்லிம் 2102
10. மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு ஆடை அணியக் கூடாது
ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்கா-ட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி
நூல்கள் : புகாரி (5822, 367, 368), முஸ்லிம் (4261)