தடை செய்யப்பட்ட உயிர் எது?

25:68 வசனத்தில், அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி கொல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட உயிர் எது? விளக்கவும்.

! கொலை செய்யக் கூடாது என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம் பெரும்பாலும், இவ்வாறே கூறப்படுகின்றது. எனவே இது பொதுவாகக் கொலை செய்யக் கூடாது என்பதையே குறிக்கும். இதை ஏன் அல்லாஹ் இப்படிக் கூறவேண்டும்? கொலை செய்யக் கூடாது என்று மட்டும் கூறினால் போதாதா? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

விபச்சாரம், திருட்டு போன்ற செயல்களைப் பொறுத்த வரை முழுமையாகத் தடுக்கப்பட்ட குற்றங்களாகும். கொலை செய்வதும் தடுக்கப்பட்ட குற்றம் தான். ஆனால் பழிக்குப் பழியாக இஸ்லாமிய அரசாங்கத்தின் மூலம் கொலை செய்வதற்கு உரிமை உள்ளது.

ஒருவன் கொலை செய்து விட்டால் இஸ்லாமிய ஆட்சியில் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவனின் பொறுப்பாளர்கள் விரும்பினால் அவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்றாமல் நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு கொலையாளியை மன்னித்து விடலாம். இது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம்.

கொலை செய்வது கூடாது என்று பொதுவாகக் கூறினால் இது போன்று தண்டனைக்காகக் கொல்வதும் கூடாது என்ற கருத்தைத் தந்து விடும்.

கொலையாளியை அரசாங்கத்தின் மூலமாகக் கொலை செய்வது அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதல்ல!

இது போல் இஸ்லாமிய அரசால் செய்யப்படும் நியாயமான போரின் போதும் எதிரிகளைக் கொல்வதற்கு அனுமதி உள்ளது.

இவை கொலையாக இருந்த போதும் அது அனுமதிக்கப்பட்ட செயலாக உள்ளது.

இது போன்று அனுமதிக்கப்பட்ட கொலைகளும் உள்ளன. எனவே தான் பொதுவாகக் கொலை செய்வது குற்றம் என்று கூறாமல், அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட உயிர்களைக் கொல்வதைப் பெரும் பாவம் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

இஸ்லாமிய சட்டப்படி மட்டுமல்லாது உலகின் எல்லா நாடுகளின் குற்றவியல் சட்டத்தின்படியும் இந்தக் கொலைகள் குற்றச் செயல்களாகக் கருதப்படுவதில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *