ஜூம்ஆ என்பது ஏழைகளின் ஹஜ்ஜா?
ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள்.
அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அல்ஜூம்அது ஹஜ்ஜூல் ஃபுகராஃ வ ஈதுல் மஸாகீன்.
இதன் பொருள் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் கூறினார்கள். ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும். மிஸ்கீன்களின் பெருநாளாகும்.
இது புகாரி(?)யில் இருப்பதாகவும் அரபியில் பிதற்றுவார்கள். புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் தமிழில் வராத காலத்தில் இப்படி ஒரு செய்தி புகாரியில் இருப்பதாகவே மக்களும் நம்பி வந்தனர். ஆனால் உண்மையில் இது நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இவர்கள் கூறுவதைப் போன்ற ஒரு செய்தி புகாரியிலோ ஏனைய ஹதீஸ் நூற்களிலோ அறவே கிடையாது.
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது. அது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : முஸ்னது ஷிஹாப் பாகம் 1 பக்கம் 128
இந்தச் செய்தி, அக்பாரு உஸ்பஹான் போன்ற இன்னும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் ஈஸா பின் இப்றாஹீம் அல் ஹாஷிமி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, நஸாயீ ஆகியோரும் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இப்னு மயீன் அவர்களும் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என இமாம் ராஸி அவர்களும் விமர்சனம் செய்துள்ளனர்.
அல்லுஆஃபாஉ வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 238