ஜும்ஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா?
ஜும்ஆ தொழுகையின் முதல் ரக்அத்தில் ருகூவு செய்து எழுந்து நிற்கும் அந்த சிறு நிலையில் ரப்பனா லகல் ஹம்து சொல்லியதும் இமாம் ஸுஜூது செய்யாமல் தொடர்ந்து நீண்ட துஆவை ஓதுகின்றார்.
இதற்கு ஆதாரம் உள்ளதா?
இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறியதும், ரப்பனா லகல் ஹம்து மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. இந்த நிலையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு திக்ருகளை கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், “ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்த். அஹக்கு மா காலல் அப்து. வகுல்லுனா லக்க அப்துன். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வல முஃத்திய லிமா மனஃத்த. வல யன்ஃபஃ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவார்கள்.
பொருள் : எங்கள் அதிபதியே! வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடமிருந்து பயன் அளிக்காது’ என்பது தான் அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்ததாகும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : முஸ்லிம் 735 (தமிழாக்கம் 822)
இது போன்ற நீண்ட திக்ரை அந்த இமாம் ஓதியிருக்கலாம். அவர் என்ன ஓதினார் என்பது தெரிந்தால் தான் அது ஆதாரமானதா? இல்லையா என்று கூற இயலும். ஆயினும் ஜும்ஆ தொழுகையின் போது மட்டும் குறிப்பிட்டு எதையும் ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
(குறிப்பு: 2003 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)