ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.?
இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர்.
முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் இஹ்திபாவு என்றும் அல்ஹப்வா என்றும் குறிப்பிடுவார்கள். இவ்வாறு அமரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதாக சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்தச் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாகவே உள்ளன. இது தொடர்பான செய்தி முஆத் இப்னு அனஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), ஜாபிர் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறிவிப்பையும் அது எவ்வாறு பலவீனமானது என்பதையும் காண்போம்.
முஆத் இப்னு அனஸ் (ரலி அறிவிப்பு
ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)
நூல் : திர்மிதி (514)
இந்த அறிவிப்பு அபூதாவூத் (1112), முஸ்னத் அஹ்மத் (15668), இப்னு குஸைமா (1815), தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (16797), சுனனுல் பைஹகி அல்குப்ரா (5704), முஸ்னத் அபீ யஃலா (1492, 1496) ஹாகிம் (1069), ஷரஹுஸ் சுன்னா (1082) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் என்பார் இடம் பெற்றுள்ளர். இவருடைய அறிவிப்பை இமாம் இப்னு மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பை பலவீனமானவை என இமாம் யஹ்யா இப்னு மயீன் விமர்சித்துள்ளார்கள்.
நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்.203)
மேற்கண்ட செய்தியை இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற செய்தியாகும். எனவே இமாம் இப்னு மயீன் அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் அது பலவீனமானதாகும்.
இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.
ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் ஹதீஸ் துறையில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார்.
(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 347)
எனவே ஸஹ்ல் பின் முஆத் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை.
மேலும் மேற்கண்ட செய்தியில் அபூ மர்ஹும் என்பாரும் இடம் பெற்றுள்ளார். இவருடைய பெயர் அப்துர் ரஹீம் இப்னு மைமூன் என்பதாகும். இவரைப் பற்றி அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு மயீன் விமர்சித்துள்ளார். மேலும் இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அவை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்.
(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் 354)
இவர் பலவீனமானவர் என இமாம் தஹபீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
(நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம் 650)
மேற்கண்ட அறிவிப்பில் ஸஹ்ல் இப்னு முஆத் மற்றும் அபூ மர்ஹும் ஆகிய இரண்டு பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அது பலவீனமான அறிவிப்பு என்று உறுதியாகிவிட்டது.
ஸஹ்ல் பின் முஆத் என்பாரிடமிருந்து ஸப்பான் இப்னு ஃபாயித் என்பவர் வழியாகவும் இதே செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜும்ஆ நாளில் முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)
நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானீ (16798) பாகம் 15, பக்கம் 108
இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல பலவீனங்கள் உள்ளன.
முதலாவது பலவீனம்:
இது ஸஹ்ல் இப்னு முஆத் தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்பாகும். எனவே இது பலவீனமானதாகும். இது பற்றிய விபரத்தை முந்திச் சென்ற செய்தியின் விமர்சனத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இரண்டாவது பலவீனம் :
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸப்பான் இப்னு ஃபாயித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள். இவர் பலவீனமானவர் என இப்னு மயீன் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.
நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம் 1, பக்கம் 292
இவர் ஹதீஸ் துறையில் மிகவும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார். இட்டுக்கட்டப்பட்டதைப் போன்று இருக்கும் ஒரு பிரதியை இவர் ஸஹ்ல் இப்னு முஆதிடமிருந்து தனித்து அறிவிக்கின்றார். இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவரிடம் மறுக்கத்தக்க செய்திகள் உள்ளன என இமாம் ஸாஜி கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 292)
மூன்றாவது பலவீனம்:
மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.
அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள்.
நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம்: 1, பக்கம் : 64
இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறினார்கள்.
நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம் 1, பக். 153
இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம்: 1, பக். 481
இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள். நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார் என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.
நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14
மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் &ஸப்பான் இப்னு ஃபாயித் என்பாரின் இந்த அறிவிப்பு மிக மிகப் பலவீனமானது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அம்ரு இப்னு ஆஸ் அறிவிப்பு
ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல்: இப்னு மாஜா
இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் இடம் பெற்றுள்ளன.
முதலாவது பலவீனம்: இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு வாகித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.
பகிய்யத் இப்னு வலீத் என்பாரின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு வாகித் மஜ்ஹுல் யாரென்றே அறியப்படாதவர் ஆவார் என தக்ரீபுத் தஹ்தீப் நூலில் இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.
அப்துல்லாஹ் இப்னு வாகித் எனும் இவர் அபூ ரஜா அல்ஹர்வீ என்பவரா அல்லது அபூகதாதா அல்ஹர்ரானீ என்பவரா? அல்லது மூன்றாவதான வேறொருவரா என்பதை நான் அறிய மாட்டேன் என தஹ்தீபுல் கமால் ஆசிரியர் மிஸ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இவர் ஹதீஸ்களில் இருட்டடிப்பு செய்பவர் என இப்னு அதீ அவர்கள் இவரை தமது முக்னீ ஃபில் லுஅஃபா எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள்.
எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள பகிய்யா இப்னு வலீத் என்பது தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவார்.
இவர் பலவீனமானவர்களிமிருந்து அதிகம் தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீபில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(பாகம் 1, பக்கம் 126)
தத்லீஸ் என்றால் தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வாரத்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆனால் மேற்கண்ட அறிவிப்பில் பகிய்யா இப்னு வலீத் தமது ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.
எனவே இந்த விமர்சனத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட செய்தி பலவீனமானது. இது ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியற்றதாகும் என்பது உறுதியாகிவிட்டது.
ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு
ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 4, பக்கம் 188
இந்தச் செய்தியும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மைமூன் அல்கத்தாஹ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இவர் ஹதீஸ்களில் சறுகியவர் என்று இமாம் புகாரியும், இவர் ஹதீஸ்களில் மிகப் பலவீனமானவர் என அபூ சுர்ஆ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என திர்மிதி அவர்களும் விமர்சித்துள்ளனர். மேலும் இவருடைய அறிவிப்புகளில் பெரும்பாலானவை மாற்று அறிவிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என நஸாயீ அவர்களும், இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்படவேண்டியவர் என அபூ ஹாதிம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டி அறிவிப்பவர் ஆவார். இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்வது கூடாது என அபூஹாதிம் விமர்சித்துள்ளார். இவர் உபைதுல்லாஹ் இப்னு உமர் என்பார் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என ஹாகிம் கூறியுள்ளார். இவர் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என அபூ நுஐம் அல்இஸ்பஹானி விமர்சித்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 44)
இந்த ஜாபிர் (ரலி) அவர்களை கூறியதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு ஆதாரத்திற்கு அறவே தகுதியில்லாத இட்டுக்கப்பட்டது என்ற தகுதியைப் பெறக்கூடிய அளவில் உள்ள மிகமிகப் பலவீனமான அறிவிப்பு என்பது உறுதியாகிவிட்டது. இமாமுடைய உரையைக் கேட்கும் போது கைகளால் முட்டுக் கால்களை கட்டிக் கொண்டு அமரக் கூடாது என்று வரும் அறிவிப்புகள் அனைத்தும் மிகப்பலவீனமானவையாக உள்ளன. எனவே இந்தப் பலவீனமான அறிவிப்புகளை வைத்து மார்க்கச் சட்டங்களை வகுப்பது கூடாது.
ஒருவர் உரையைக் கேட்கும் போது முட்டுக் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால் அதில் எவ்விதத் தவறுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துள்ளார்கள் என ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை முழங்காலில் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
நூல்: புகாரி 6272
அதே நேரத்தில் மர்மஸ்தானம் தெரியும் வகையில் இவ்வாறு இருப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 584