ஜின்களுக்கு மறைவானவை தெரியாது
இவ்வசனத்தில் (34:14) ஜின்கள் எனும் படைப்புக்கு மறைவானவை தெரியாது என்று கூறப்படுகிறது.
மனிதனை விட ‘ஜின்’ என்ற படைப்புக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டிற்குள் இருக்கும் சிம்மாசனத்தை மற்றொரு நாட்டில் கொண்டு வந்து வைக்குமளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
விமானங்களோ, ராக்கெட்டுகளோ இல்லாமல், வானுலகம் சென்று வானவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க முயற்சிக்கும் அளவிற்கு அவர்களுக்கு ஆற்றல் உள்ளது.
இவ்வளவு ஆற்றல் வழங்கப்பட்டிருந்தாலும் மறைவானவற்றை ஜின்களால் அறிந்து கொள்ள முடியாது.
ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார். ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார். பிறகு கைத்தடியைக் கரையான்கள் அரித்தபோது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகு தான் ஸுலைமான் ஏற்கனவே இறந்து விட்டார் என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிந்தது என்று இவ்வசனத்தில் (34:14) கூறப்படுகிறது.
தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஸுலைமான் நபி உயிருடன் இருக்கிறாரா? மரணித்து விட்டாரா? என்பதை ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
ஜின்களுக்கே மறைவானவை தெரியவில்லை எனும்போது மகான்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்றும், மரணித்தவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்றும் நம்பக்கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.