*ஜமாஅத் நிர்வாகிகளுக்கான மார்க்க வழிகாட்டல்*

இஸ்லாமியப் பார்வையில் பொறுப்பு என்பது அலங்காரமோ, புகழைத் தேடும் கருவியோ அல்ல, மாறாக அது ஒரு *மாபெரும் அமானிதம்*. இது குறிப்பாக ஜமாஅத் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு மறுமையில் கடுமையாக விசாரிக்கப்படும் ஒரு முக்கிய கடமையாகும்.

ஜமாஅத் என்பது அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களிடம் தூய வடிவில் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு கூட்டமைப்பு. இதில் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் தங்கள் செயல்கள், முடிவுகள் மற்றும் எண்ணங்களை *அல்லாஹ்வின் திருப்தியை மையமாகக்* கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன* (புஹாரி 1) ஒரு ஜமாஅத் நிர்வாகியின் பயணம் தொடங்குவது அவரது நிய்யத்திலிருந்து.

*நான் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன், அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உழைத்து, அவனது திருப்தியைப் பெறுவதற்காக* என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும்.

இந்தப் பொறுப்பை *வியாபார லாபத்திற்கோ, உலக ஆதாயங்களுக்கோ பயன்படுத்த நினைப்பது, இந்த எண்ணத்தை மாசுபடுத்துவதாகும்*.

இந்த எண்ணத்தில் *முகஸ்துதி* அல்லது *பெருமை* போன்ற கலப்படங்கள் ஊடுருவினால், அது *ஷைத்தானின் தூண்டுதலாக மாறி, செயல்களின் மதிப்பைக் குறைத்துவிடும்.*

ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய பிறகு அல்லது ஒரு தாவா பணியைச் சிறப்பாக முடித்த பிறகு, நாம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும். மக்களின் பாராட்டுகள் நம்மை அசைத்துப் பார்க்கலாம்.

அந்த நேரத்தில், *யா அல்லாஹ்! எல்லாப் புகழும் உனக்கே. உனது உதவி இன்றி இது சாத்தியமில்லை* என்று நம் உள்ளத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புவது *இறை அச்சத்தின்* அடையாளமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்.* (3:102).

தக்வா என்பது, *தனிமையிலோ, மக்கள் கூட்டத்திலோ, அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் செயல்படுவதாகும்*. ஒரு ஜமாஅத் நிர்வாகிக்கு இந்த தக்வாதான் மிகப் பெரிய கவசம்.

ஜமாஅத்தின் நிதி என்பது ஒரு அநாதையின் சொத்தை விட மிகவும் புனிதமான அமானிதம். ஒரு ரூபாய் செலவு செய்யும்போது கூட, *இதற்கு மறுமையில் பதில் சொல்ல வேண்டும்* என்ற அச்சம் இருக்க வேண்டும்.

ஒரு முடிவு எடுக்கும்போது, *இது எனக்கு அல்லது என் நண்பருக்கு சாதகமாக இருக்குமா?* என்று சிந்திக்காமல், *இது குர்ஆன் மற்றும் சுன்னாவுக்கு உகந்ததா? இது ஜமாஅத்தின் நலனுக்கு உதவுமா?* என்று மட்டுமே சிந்திக்க வேண்டும்.

*தனக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் என்ற பாரபட்சம் காட்டாமல், அனைவரையும் சமமாக நடத்துவது தக்வாவின் வெளிப்பாடு*.

விமர்சனங்களைத் திறந்த மனதுடன் ஏற்று, *தவறுகளைத் திருத்திக் கொள்வது இறை அச்சமுள்ள நிர்வாகியின்* இயல்பு.

*முகஸ்துதி என்பது நம் பணிகளை அழித்துவிடக்கூடிய ஒரு கொடிய நச்சு*.

எவ்வளவு பெரிய தியாகங்களைச் செய்தாலும், பிறரின் பாராட்டை எதிர்பார்த்தால், அந்த அமல்கள் மறுமையில் தூசாகப் பறந்துவிடும். ஒரு ஜமாஅத் நிர்வாகி தன்னைத் தானே சுயபரிசோதனை செய்ய வேண்டிய கேள்விகள்:

1 ) என் பணிகள் மூலம் வியாபார லாபமோ, புகழோ கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனா?

2 ) என் பணிகள் மீடியாக்களில் வர வேண்டும், என் பெயர் அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனா?

3 ) பலர் பார்க்கும் பணிகளில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுகிறேனா, அல்லது திரைமறைவுப் பணிகளிலும் அதே ஆர்வத்துடன் உழைக்கிறேனா?

4 ) என் கருத்து ஏற்கப்படவில்லை என்றால், என் மனம் கோபமோ கர்வமோ கொள்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு *ஆம்* என்ற பதில் வருமானால், உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி, நமது எண்ணத்தைச் சரி செய்ய வேண்டும். *உண்மையான ஊழியன், தன் பெயர் உயர்வதை விட அல்லாஹ்வின் மார்க்கம் உயர்வதையே விரும்புவான்*. திரைக்குப் பின்னால் உழைப்பதையே பெருமையாகக் கருதுவான்.

சகோதரர்களே, ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பு என்பது *முட்கள் நிறைந்த பாதை*.

இதில் *அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணிப்பவர்களுக்கு மறுமையில் மகத்தான கூலி* காத்திருக்கிறது.

அதேநேரம், *உலக ஆதாயங்களையோ புகழையோ நாடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் உண்டு*.

நமது பதவி நிரந்தரமல்ல; நமது வாழ்வும் நிரந்தரமல்ல. ஆனால், *இக்லாஸுடன் (மனத்தூய்மையுடன்) செய்யப்படும் ஒவ்வொரு பணியும் அல்லாஹ்விடம் நிரந்தரமான கூலியைப் பெற்றுத் தரும்.*

முகஸ்துதி, பெருமை போன்ற தீய குணங்களிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக.

அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றி, அவனது திருப்தியைப் பெறும் நல்லடியார்களாக ஆக்குவானாக. ஆமீன்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *