ஜனநாயகம் பற்றி இஸ்லாம்
இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.
மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.
பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.
ஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.
எந்த ஒரு இயக்கமானாலும் தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வராது.
மார்க்கத்தில் நுனிப்புல் மேயும் சிலர், சில காலத்திற்கு முன் ஜனநாயகம் நவீன ஷிர்க் என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அவர்கள் இன்று அலைவதே இதற்கு உதாரணம்.
ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்தவர்கள் இன்று தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கிறோம்.
ஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் பின்னர் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.
ஜனநாயகம் இணை வைத்தல் என்று கூறி கூட்டம் சேர்ப்பதும் போதுமான கூட்டம் சேர்ந்தவுடன் அவர்களைப் பயன்படுத்தி அதே இணை வைத்தலில் விழுவதும் தொடர் கதையாக இந்தச் சமுதாயத்தில் நடந்து வருகிறது.
ஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.
திருக்குர்ஆன் 12:40
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்? திருக்குர்ஆன் 5:49, 50
அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.
திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67
OnlineTntj