தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா

பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும்.

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1852

ஒரு மனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளன. எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகின்றது என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீயும், உனது செல்வமும் உன்னுடைய தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 3063

பெற்றோரின் கடனை அடைப்பது பிள்ளைகள் மீதுள்ள கடமையாகும். அதாவது பெற்றோர் பட்ட கடன் பிள்ளைகள் பட்ட கடனாகவே மார்க்கம் கருதுகிறது.

உங்களுக்குக் கடன் இருந்தால் எப்படி அந்தக் கடனை அடைத்து விட்டு அதன் பிறகு எஞ்சியதில் இருந்து ஜகாத் கொடுப்பீர்களோ அது போல் உங்கள் சொத்தில் இருந்து பெற்றோரின் கடனை அடைத்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத் கொடுங்கள்.

பெற்றோரின் கடனுக்காக ஜகாத்தில் இருந்து செலவிட்டால் உங்களுக்கு நீங்களே ஜகாத் கொடுத்துக் கொண்டதாகவே ஆகும்

எனவே ஜகாத்துடைய பணத்திலிருந்து தாயின் கடனை அடைக்காமல் உங்களுடைய கடமை என்ற அடிப்படையில் உங்களுடைய பணத்திலிருந்தே அதை அடைக்க வேண்டும்.


ஏகத்துவம்