சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்களாக இருப்பார்கள்?

மறுமையில் சொர்க்கவாசிகள் அனைவரும் முப்பத்து மூன்று வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி திர்மிதீ, அஹ்மது, பைஹகீ, மற்றும் தப்ரானீ ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சொர்க்கவாசிகள் முப்பது வயது அல்லது முப்பத்து மூன்று வயது உள்ளவர்களாக சொர்க்கத்திற்குள் நுழைவார்கள். அவர்களின் உடலில் (தேவையற்ற) முடிகள் இல்லாமலும் (கண்களுக்கு) சுர்மா இட்டவர்களாகவும் அழகிய தோற்றத்தில் செல்வார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
நூல் : திர்மிதி 2468

திர்மிதியில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் இம்ரான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மனனசக்தி குறைபாடுள்ளவர் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே இந்த அறிவிப்பை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் இந்தச் செய்தி

ரிஷ்தீன்,
யசீத் பின் சினான்,
அலீ பின் ஸைத் பின் ஜத்ஆன்

ஆகியோரின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களும் பலவீனமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் வழியாக இது அறிவிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமானசெய்தியாகும்.

எனவே சொர்க்கவாசிகளின் வயதைத் தெளிவாகக் குறிப்பிடும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

ஆனால் சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் எப்பொழுதும் இளமையோடு இருப்பார்கள் என ஆதாரப்பூர்வமான செய்தி கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், “(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோயுற மாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள் ஒருபோதும் இறக்க மாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடு தான் இருப்பீர்கள்; ஒரு போதும் துன்பம் காண மாட்டீர்கள்’

என்று அறிவிப்புச் செய்வார். இதையே அல்லாஹ், “இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்து கொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்” (7:43) என்று கூறுகின்றான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5457

மேலும் அவர்களுக்கு சொர்க்கத்தில் வாழ்க்கைத் துணையும் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.

“நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது’‘ எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் (2 : 5457)

சொர்க்கவாசிகள் வாலிபர்களாக இருப்பார்கள் என்பதை இந்த ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *