சொர்க்கம் & நரகம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 6487 ) அஹ்மத் ( 7375 ) இப்னு ஹிப்பான் ( 720 )
இறைக்கட்டளையின் படி இவ்வுலகில் வாழும் நன்மக்களுக்கு மறுமை நாளில் மாபெரும் சொர்க்கம் என்ற பரிசை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
இந்தச் சொர்க்கத்தில் உள்ள சுகங்கள் யாரும் கண்டிராதவை ; யாரும் கேட்டிராதவை ; யாரும் சுவைத்திராதவை ! அந்த இன்பதிற்கு நிகர் , அந்த இன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை , நினைத்ததும் கேட்டதும் நிரந்தரமாகக் கிடைக்கும் சண்டைகள் இல்லை சச்சரவுகள் இல்லை மரணமும் இல்லை இப்படி ஏராளமான இன்பங்கள் நிறைந்தது சொர்க்கமாகும்.
இவ்வளவு பெரிய சொர்க்கத்தைப் பெற சில கஷ்டங்களை நாம் இவ்வுலகில் ஏற்றே ஆக வேண்டும். இதைத் தான் நபி ஸல் அவர்கள் சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்றார்கள். சிரமம் என்ற போர்வையை நாம் எடுத்து கொண்டால் தான் சொர்க்கம் என்ற இடத்தைப் பார்க்க முடியும்.
இறைக் கட்டளையை நிறைவேற்ற பல துன்பங்களைச் சந்திக்க வேண்டும் துன்பங்கள் வருகிறது என்பதற்காக இறைக் கட்டளையை நாம் நிராகரித்து விடக் கூடாது.
அதே போல் மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது என்பதன் பொருள் யார் மன இச்சைகளை எடுத்துக் கொண்டாரோ அவர் நரகத்தைக் காண்பார் என்பதாகும். எனவே மன இச்சையை நிராகரித்து சொர்க்கத்தைக் கடமையாக்கிக் கொள்வோம்.
ஏகத்துவம்