சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை?
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும் நபிகளார் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
ஒருவர், நாள் ஒன்றுக்கு 12 ரக்அத்கள் உபரியாகத் தொழுதால் அவருக்குச் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டித் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
நூல்: முஸ்லிம் (1319)
மேற்கண்ட ஹதீஸ் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
நூல்: முஸ்லிம் (1320)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் ‘அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான்’ அல்லது ‘அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது’.
நூல்: முஸ்லிம் (1321)
இந்தச் செய்தியில் ‘(கடமையல்லாத) உபரியான வணக்கமாக 12 ரக்அத்கள் தொழுதால்’ என்று இடம்பெற்றுள்ளது.
அவற்றில் “ஒரு முஸ்லிமான அடியார் செம்மையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு நாளும் (கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள்) தொழுதால்…’’ என்று ஹதீஸ் தொடங்குகிறது.
நூல்: முஸ்லிம் (1321)
இந்த அறிவிப்பில், ‘ஒவ்வொரு நாளும் அழகுற உளூ செய்து 12 ரக்அத் தொழுதால்’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அழகுற உளூ செய்து தினமும் 12 ரக்அத் உபரியாகத் தொழுது வந்தால் அவருக்குச் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டித் தருவான் என்ற நற்செய்தி இந்த நபிமொழிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பன்னிரண்டு ரக்அத்கள் எவை என்பது குறித்த செய்திகள்
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (கடமையல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (லுஹர்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
மக்களுக்கு மஃக்ரிப் தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்.
மக்களுக்கு இஷா தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் ஸஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்வார்கள்.
ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷக்கீக்,
நூல்கள்: முஸ்லிம் (1323), அபூதாவுத் (1060)
இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், ஃபஜ்ருக்குப் முன் 2 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் 12 ரக்அத்கள் இடம்பெற்றுள்ளது. இது தவிர்த்து இரவுத் தொழுகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நபிகளார் தொழுது வந்த இந்த எண்ணிக்கையில் தொழுவதன் மூலம் நாம் சொர்க்கத்தில் வீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.