சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ*
மனிதன் என்ற ரீதியில், நாம் அனைவரும் தவறு செய்பவர்களே. அறிந்தோ, அறியாமலோ பாவங்கள் செய்வது மனித இயல்பு.
ஆனால், செய்த தவறுக்காக வருந்தி, *அல்லாஹ்விடம் மீண்டு, மனமுருகி மன்னிப்புக் கோருவதே இறையச்சமுடையவர்களின் பண்பாகும்*.
அப்படி மன்னிப்புக் கோருவதற்காக (*இஸ்திஃபார்-அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுதல்*) இஸ்லாம் நமக்கு பல வழிகளையும், துஆக்களையும் கற்றுத் தந்துள்ளது.
அவற்றில் மிகச் சிறப்பானதும், *பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ* (ஸய்யிதுல் இஸ்திஃபார்) என்று நபிகளாரால் சிறப்பித்துக் கூறப்பட்டதுமான ஒரு துஆவை பற்றி நாம் இங்கு காண்போம்.
//*நபிகளாரின் நற்செய்தி* //
இந்த துஆவின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக, நபிகளார் ஒரு மாபெரும் நற்செய்தியைக் கூறியுள்ளார்கள்.
*ஒருவன் இந்த துஆவை (ஸய்யிதுல் இஸ்திஃபார்) பகலில் உறுதியான நம்பிக்கையுடன் ஓதி, அன்றே அவன் மரணித்து விட்டால், அவன் சொர்க்கவாசியாவான்*.
இவ்வாறே, இரவில் இதை உறுதியான நம்பிக்கையுடன் ஓதி, அந்த இரவிலேயே அவன் மரணித்து விட்டால், அவனும் சொர்க்கவாசியாவான்.
(புகாரி-6309)
இந்த ஹதீஸ், இந்த துஆவின் அளப்பரிய சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் இதை ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்பவருக்கு, *சொர்க்கம் எனும் பேரின்ப வீட்டை அல்லாஹ் பரிசாக வாக்களிக்கிறான்*.
\\*துஆவின் ஆழமான பொருள்* \\
ஏன் இந்த துஆ இவ்வளவு சிறப்பு வாய்ந்தது?
இதன் பொருளை நாம் சிந்திக்கும்போது, அது நமக்குப் உணர்த்தும்.
பொருள்:
*இறைவா! நீயே என் எஜமான்.*
*உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.*
*என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை*.
*உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன்*.
*நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்*.
எனவே *என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.*
இந்த துஆ ஒரு சாதாரண மன்னிப்புக் கோரிக்கை மட்டுமல்ல. *இது அல்லாஹ்க்கும், அவனது அடிமைக்கும் இடையேயான உறவின் முழுமையான ஒப்புதல் வாக்குமூலம்*.
*\\ ஏகத்துவத்தை* நிலைநிறுத்துதல்* \\
*நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லைl*
என்று கூறி, தனது முழுமையான விசுவாசத்தை அல்லாஹ் ஒருவனுக்கே என்று அடியானாகிய நாம் பிரகடனம் செய்கிறோம்.
\\ *அடிமைத்தனத்தை ஒப்புக்கொள்ளுதல்* \\
*என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை*
என்று கூறி, தனது பலவீனத்தையும், அல்லாஹ்வின் பேராற்றலையும் அவன் ஏற்றுக்கொள்கிறோம்.
\\ *முயற்சியையும், பலவீனத்தையும் சமர்ப்பித்தல்* \\
*இயன்ற வரை நடப்பேன்* என்பது,
மனிதன் தனது முழு முயற்சியையும் போடுவான் என்பதையும், *நான் செய்த தீமையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன்* என்பது,
அந்த முயற்சியிலும் தவறு நேர்ந்துவிடும் என்பதை உணர்ந்து, அதற்காகப் பணிவதையும் காட்டுகிறது.
\\*நன்றியுணர்வும், பாவ ஒப்புதலும்* \\
*நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்* என்ற வரி மிக முக்கியமானது.
அல்லாஹ் தனக்கு கணக்கற்ற அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான் என்பதையும்,
ஆனால் *நாமோ அவனுக்கு நன்றி மறந்து பாவம் செய்துவிட்டோம்* என்பதையும் ஒரே நேரத்தில் ஒப்புக்கொள்வதாகும்.
\\*முழுமையான சரணடைதல்* \\
*உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது* என்று கூறுவது,
இவ்வுலகில் வேறு யாரிடமும், *எந்த சக்தியிடமும் நமது பாவங்களை முறையிடவோ, மன்னிப்பைத் தேடவோ முடியாது* என்ற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
*ஸய்யிதுல் இஸ்திஃபார் என்பது வெறும் வார்த்தைகளின் கோர்வை அல்ல; அது ஈமானின் வெளிப்பாடு*.
ஓர் அடியான் தனது இறைவனிடம் எவ்வளவு பணிவாக, உண்மையாக, முழுமையாகத் தன்னை சமர்ப்பிக்க வேண்டுமோ, அதன் அத்தனை அம்சங்களையும் இந்த ஒற்றை துஆ உள்ளடக்கியுள்ளது.
எனவே, இந்த மகத்தான துஆவை மனனம் செய்து, இதன் பொருளை உணர்ந்து, ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் இறைவனிடம் மனமுருகி ஓதி வருவோமாக.
அதன் மூலம், *நபிகளார் வாக்களித்த அந்த மேலான சொர்க்கத்தை அடைந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.*