இந்த வசனத்தில் (7:49) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு அச்சமும் இல்லை; கவலைப்படவும் மாட்டீர்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைச் சொல்பவர்கள் யார் என்பதிலும், யாரை நோக்கி சொல்லப்படுகிறது என்பதிலும் விரிவுரையாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இது, தடுப்புச் சுவர் மீது இருப்பவர்களை நோக்கி அல்லாஹ் கூறும் வார்த்தை என்று சிலர் கருத்து கொள்கின்றனர்.
இந்தக் கருத்துப்படி தடுப்புச் சுவர் மீது இருப்பவர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்.
இது தடுப்புச் சுவற்றின் மேல் இருப்பவர்களின் கூற்று என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
தடுப்புச் சுவற்றின் மேல் இருப்பவர்கள், சொர்க்கவாசிகளைச் சுட்டிக்காட்டி “இவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று சத்தியம் செய்து கூறினீர்களே? சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறப்பட்டு விட்டதே?” என்று நரகவாசிகளிடம் கூறும் வார்த்தைகள் என்பது வேறு சிலரின் விளக்கம்.
இரு விதமாகக் கருத்து கொள்ளவும் இவ்வசனம் இடம் தருகிறது.