செவியும், பார்வைகளும், தோல்களும் எதிராக சாட்சியம் அளிக்கும் என்று இறங்கிய இறைவசனம்
(ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப்’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களின் மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘நம்முடைய பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார்.
அவர்களில் ஒருவர், ‘(நம்முடைய பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்’ என்று பதிலளித்தார். மற்றொருவர் ‘நம்முடைய பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்’ என்று கூறினார்.
அப்போதுதான், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ எனும் இந்த வசனம் (திருக்குர்ஆன் 41:22) அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 4816