செல்வம் ஒரு சோதனை

மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை. 

நான் அபூஹுரைரா (ரலி) அவர்கடம் ஏழு இரவுகள் விருந்தாயாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறை வைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பி விடுவார். (அவர் தொழுது முடித்தவுடன்) இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார்.

அறிவிப்பவர்  : அபூஉஸ்மான்,

நூல் : புகாரி (5441)

நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்களில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்கள். நபி (ஸல்) அவர்கள் தொடர்பான பெரும்பாலான செய்திகளை அறிவித்தவர்கள் இவர்கள் தாம்.

திண்ணைத் தோழராக இருந்து பசியும் பட்டினியுமாக நபிகளார் காலத்தில் காலத்தைத் தள்ளி, நபிகளாருடன் அதிகமாகத் தொடர்புடன் இருந்ததால் அதிகமான செய்திகளை அவர்களால் அறிவிக்க முடிந்தது.

மேலும் ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள்.

முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா (ர) அவர்கடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் கமண் சாயம் இடப்பட்ட, கத்தான் வகையிலான இரண்டு ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு அடடா! அபூஹுரைரா! கத்தான் வகையைச் சார்ந்த துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடைக்கும் ஆயிஷா (ர) அவர்களது அறைக்குமி டையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசி தான் (மேட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவிற்கு வறுமையில் இருந்தேன்.) என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 7324

வசதியான நிலையை அடைந்த பிறகும்…

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பசி மயக்கத்தால் தரையில் உருண்டு கிடந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பிற்காலத்தில் நல்ல நிலைஏற்பட்டு, திருமணம் கூடச் செய்து கொண்டார்கள். பஸராவின் ஆளுநராக இருந்த உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்களின் சகோதரி புஸ்ரா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

(பத்ஹுல்பாரி)

ஏழ்மை நிலையில் இருந்து நல்ல நிலைக்கு வந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மனைவி மற்றும் பணிவிடை செய்ய வேலையாளும் கிடைத்தது. வசதியான நிலையை அடைந்தவுடன் படைத்தவனை மறந்து விடாமல் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியாராக அபூஹுரைரா (ரலி) இருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட (5441) செய்தியில், கடமையான தொழுகையல்லாத இரவுத் தொழுகையை தாமும் தொழுததுடன் தம் மனைவியையும் வேலைக்காரரையும் தொழச் செய்துள்ளார்கள். இந்த நல்ல பண்பு எல்லோரிடம் இருக்க வேண்டும்.

கஷ்டப்பட்ட நிலையில் காலம் தவறாமல் பள்ளிக்கு வந்து சென்றவர், அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தவுடன் கார், பங்களா என்று வாங்கிய பின்னர் ஏ.சி.யில் சூரியன் உதித்தது கூடத் தெரியாமல் உறங்குபவர்கள் ஏராளம்.

துன்பத்தை நீக்கி வசதி வாய்ப்புகளைத் தந்த அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டியவர் இருந்ததையும் விட்டுவிடும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறார். ஆனால் கடுமையான கஷ்டங்களில் மூழ்கியிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நல்ல நிலை வந்த பின்னர் படைத்தவனை அதிகமதிகம் நினைவு கூரத் தொடங்கினார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6)

என்ற வசனத்தின் அடிப்படையில் தம் குடும்பத்தாரையும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நல்லறங்கள் செய்பவர்களாக மாற்றியுள்ளார்கள். மேலும் வேலைக்காரரைக் கூட இறை வணக்கத்தில் ஈடுபடச் செய்துள்ளார்கள்.

இரு நற்பலன்கள்

ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி 3446)

அடிமையாக இருப்பவருக்குக் கல்வியும் நல்லொழுக்கமும் கற்பிக்கும் போது இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு, தன் வேலையாளுக்கும் வணக்க வழிபாடு முறையைக் கற்றுக் கொடுத்து, அவர்களையும் உபரியான வணக்கம் செய்பவராக மாற்றியுள்ளார்கள்.

ஆனால் இன்று முதலாளியாக இருப்பவர்கள், தொழிலாளி தொழுகைக்குச் செல்ல அனுமதி கேட்டால் கூட மறுப்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். தொழிலாளி நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் அவரைக் கடமையான மற்றும் உபரியான தொழுகையைப் பேணுபவராகவும் நல்லொழுக்கம் மிக்கவராகவும் மாற்றுவது முதலாளிகள் செய்யும் நற்காரியம் என்பதை மறக்கக் கூடாது.

அபூஸமீஹா

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *