செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம்
மறுமை இருக்கிறது என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயமாக நாம் இருந்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி அதையே குறிக்கோளாக கொண்டு, மார்க்க கட்டளைகளை பின்னுக்கு தள்ளி விடுகிற மக்களாக பல நேரங்களில் நாம் மாறிவிடுகிறோம்!
நபியவர்கள், ”நமக்கு அதிகமாக செல்வம் கொடுக்கப்பட்டு, அந்த உலகாசையானது இந்த சமுதாயத்தை அழித்துவிடுமோ” என்று பயந்திருக்கிறார்கள் என்றால், உலக ஆசையின், பொருளாதாரத்தின் பின் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, “ஜிஸ்யா’ (காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும் படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.
அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக் கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்து விட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.
ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி),
நூல் : முஸ்லிம் 5668
இவ்வுலகத்தில் பொருளாதரம் அதிகமாக வழங்கப்பட்டால் நன்மைகளை செய்யாமல், மறுமையை மறந்து இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியிருப்போம் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.
எந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்களோ அதைத்தான் மனிதன் அதிக அதிகமாக விரும்பக் கூடியவனாக இருக்கிறான்.
உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.
என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வுலகம் நிறந்தரம் இல்லை
அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி),
நூல் : புகாரி 6414
அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னோற கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.
உலகின் மீது பேராசைப்பட்டால்..
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.
ஆபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),
நூல் : புகாரி 1472
சொர்க்கத்தின் இன்பங்கள் சொர்க்கத்தை விளங்குதல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “இந்த உலகத்தில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உனக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதில்லை” என்று கூறுவார் என்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி),
நூல் : முஸ்லிம் 5407
சொர்க்கத்தை விளங்குவதற்காக இந்த சம்பவத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காண்பிக்கிறார்கள்.
அளவே இல்லாதது.
சொர்க்கத்தின் பிரம்மாண்டம், கேட்டதெல்லாம் கிடைக்கும், என்றென்றும் இளமை, நோய் இல்லாத வாழ்க்கை, அழகான துணைகள் என மறுமையில் கிடைக்கும் ஆனந்தம் அளவே இல்லாதது.
“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”
அறிவிப்பவர் : அனஸ்(ரலி),
நூல் : புகாரி 6568
எனவே சொர்க்கத்தைப் பற்றி அதிகமாக நினைத்து இந்த உலக வாழ்வில் அல்லாஹ்வை மறந்துவிடாமல் கடமைகளை நாம் செய்ய வேண்டும்