இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த மடமை வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான்.
பில்லி, சூனியம் என்று மக்களை ஏமாற்றி வந்த யூதர்கள் அதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உள்ளது என்று காட்டுவதற்காக ஜிப்ரீல், மீக்காயீல் என்ற இரு வானவர்கள் வழியாகவே இது தமக்குக் கிடைத்தது எனக் கூறிவந்தனர்.
இரண்டு வானவர்களான ஜிப்ரீல், மீகாயீல் ஆகியோருக்கு சூனியம் அருளப்படவில்லை என்று இவ்வசனம் மறுத்துரைக்கிறது.
ஹாரூத், மாரூத் என்ற இரு மனித ஷைத்தான்கள் தான் சூனியத்தின் ஆசான்கள். மலக்குகள் அல்லர் என்பதும் இவ்வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஹாரூத் மாரூத் இருவரும் வானவர்கள் என்று சிலர் வாதிட்டு அதற்கேற்ப இவ்வசனத்தைத் தவறாக மொழிபெயர்த்துள்ளனர்.
சூனியக் கலை அந்த வானவர்களிடமிருந்து ஸுலைமான் நபிக்கு வந்து, அவர் வழியாகத் தமக்கு வந்தது என்றும் பித்தலாட்டம் செய்து வந்தனர். சூனியதைக் கற்றுக் கொடுப்பது இறைமறுப்பு என்றும் அத்தகைய இறைமறுப்பை இறைத்தூதரான ஸுலைமான் அவர்கள் ஒருபோதும் செய்ததில்லை எனவும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.