சிவப்பு நிற ஆடை அணியலாமா ?
பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும், இரு புஜங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ள (அகண்ட மார்புடைய)வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கின்றேன். அதை விட அழகான ஆடையை நான் பார்த்ததில்லை.
நூல் : புகாரி 3551
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு, சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது; யாருக்காவது செருப்பு கிடைக்காமல் இருந்தால் தோலினால் ஆன காலுறை அணிந்து கொள்ளலாம் அந்தக் காலுறை கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 366
இந்தச் செய்தியில் இஹ்ராம் அல்லாத மற்ற சமயத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொள்ளலாம் என்று விளங்க முடிகின்றது. குங்கும நிற ஆடைக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் ஹஜ் அல்லாத மற்ற காலங்களிலும் காவி ஆடை அணியக் கூடாது என்று தனியாகத் தடை வந்துள்ளது.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது சிவப்பு நிற ஆடை அணிவதையும் தங்கம் மோதிரம் அணிவதையும் ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.
நூல்: நஸயீ 5171
இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சில அறிஞர்கள், “முதலாவது செய்தியில் சிவப்பு நிறம் அனுமதிக்கப் பட்டதாக வருகிறது; இரண்டாவது செய்தியில் தடுக்கப்பட்டதாக வருகிறது;
எனவே ஆடைகளில் குறைவாக சிவப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; முற்றிலும் சிவப்பாக இருக்கக் கூடாது” என்று கூறுகின்றனர்.
ஆனால் இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் நஸயீயின் இந்த அறிவிப்பில் மட்டுமே சிவப்பு என்று வருகிறது. இதே இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக,
இதே வார்த்தையில் நஸயீயில் வேறு சில அறிவிப்புக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த அறிவிப்புக்கள் அனைத்திலும் காவி நிறம் என்று வந்துள்ளது.
எனவே இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் காவி நிறம் என்பதற்கு சிவப்பு என்று சொல்லி விட்டனர்.
ஏனென்றால் நிறத்தால் இரண்டும் ஒத்ததாக இருப்பதால் இப்படி மாற்றிக் கூறியிருக்கலாம் என்று விளங்கிக் கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை.