சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா?
செய்யலாம்
எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான் (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முழங்கால் தெரிகிறது) இப்படி செய்வது சரியா? ஆடை அணிவதன் முறையை விளக்கவும்.
ஆண்கள் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூச் செய்வதோ, சாப்பிடுவதோ தவறல்ல. இவற்றைச் செய்யும் போது முட்டுக்கால் மறைக்கப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
இவை தவிர இதர நேரங்களிலும் கூட ஆண்கள் முட்டுக்கால்களை மறைக்க வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் அபூபக்ர் (ரலி) அவர்களின் முட்டுக்கால் தெரிந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்கவில்லை.
3661 அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முட்டுக்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிகள் நாயகம் -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும், கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன்.
பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க வீட்டார், “இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று.
எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முட்டுக்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்.” என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். “பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள்.
அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலைநிறுத்தும் பணியில்) தன்னையும், தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.
நூல் : புகாரீ 3661
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்கள் முன்னிலையில் முட்டுக்கால்கள் தெரிய அமர்ந்திருக்கிறார்கள் பார்க்க
புகாரி 3695