சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?
சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும் வகைப்படுத்தி உள்ளார். இது குறித்து நம் ஜமாத் நிலைபாடு என்ன ?
கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமையில் நோற்பது கூடாது என்ற கருத்தில் திர்மிதி, அபூதாவூது, அஹ்மத், இப்னு ஹூசைமா, ஹாகிம், பைஹகி போன்ற பல நூற்களில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.
அந்தச் செய்தி இதுதான்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு கடமையாக்கப்பட்டவற்றைத் தவிர (வேறு எந்த நோன்பையும்) சனிக்கிழமையில் நோற்காதீர்கள். உங்களில் ஒருவர் (சனிக்கிழமை அன்று உண்பதற்காக) திராட்சையின் காம்பு அல்லது மரத்தின் குச்சியைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதையாவது மென்று கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அஸ்ஸம்மாவு பின்த் புஸ்ர் (ரலி)
நூல் : அபூதாவூத் (2423)
இந்தச் செய்தியினை அல்பானி போன்ற அறிஞர்கள் ஸஹீஹ் என்று கூறினாலும் இது ஏற்றுக் கொள்வதற்கு தகுதியான செய்தி அல்ல.
இது அறிவிப்பாளர் தொடர் குளறுபடியுடன் அறிவிக்கப்பட்ட ஒரு செய்தியாகும்.
இதன் கருத்து இதை விட வலிமையான பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு நேரடியாக முரண்படும் வகையில் அமைந்துள்ளது.
முதலில் இந்த ஹதீஸ் குறித்து ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்தைப் பார்ப்போம். ஆதாரப்பூவமான ஹதீஸுக்கு எப்படி முரண்படுகிறது என்பதை அடுத்து பார்ப்போம்.
சனிக்கிழமை நோன்பு நோற்பதற்குத் தடை என வந்துள்ள ”அஸ்ஸம்மா பின்த் புஸ்ர்” உடைய அறிவிப்பை இமாம் ஸுஹ்ரி அவர்கள் மறுத்துள்ளார்கள். இதன் தரத்தை அறிந்த பிறகு இதை ஹதீஸாக எந்த அறிஞரும் கருதமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார். (பாகம் 2 பக்கம் : 81)
சனிக்கிழமை நோன்பு நோற்பது கூடுமா? என்று ஸுஹ்ரி அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ”அதனால் ஒன்றுமில்லை. (நோற்கலாம்) என பதிலளித்தார்கள். அன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதே என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ”அது ஹி்ம்ஸ் வாசியுடைய (சுயச்) செய்திதான் எனப் பதிலளித்தார். ஸுஹ்ரி அவர்கள் அதனை அறிவிப்பதற்கு தகுதியான ஹதீஸாக கருதவில்லை. அவர் அதனை பலவீனமாக்கியுள்ளார்.
நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார். (பாகம் 2 பக்கம் : 81)
(சனிக்கிழமை நோன்பு நோற்பது கூடாது) என்பது தொடர்பாக ”அஸ்ஸம்மாவு பின்த் புஸ்ர்” உடைய ஹதீஸ் வந்துள்ளது. யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இந்த ஹதீஸைத் தவிர்த்து விடுவார். அந்த செய்தியை எனக்கு அறிவிப்பதற்கு மறுத்து விட்டார் என இமாம் அஹ்மத் கூறியதாக அஸ்ரம் கூறுகின்றார்.
நூல் : அல்ஃபுரூஃ (பாகம் 5 பக்கம் 105)
சனிக்கிழமை நோன்பு தொடர்பாக இப்னு புஸ்ர் (ரலி) அவரகள் வழியாக அறிவிக்கப்படும் செய்தி குறித்து இமாம் அவ்சாயீ கூறுகிறார் : ”இந்தச் செய்தி (மக்களிடம்) பரவிவிட்டது என்று நான் கருதும் வரை இதனை (அறிவிக்காமல்) தொடர்ந்து மறைப்பவனாகவே இருந்தேன். இது பொய்யான செய்தி என்று மாலிக் இமாம் கூறியதாக அபூதாவூத் கூறுகிறார்.
நூல் : ஸுனனுல் பைஹகி அல்குப்ரா (பாகம் 4 பக்கம் 302) அபூதாவூத் (2426)
مختصر سنن أبي داود للمنذري ت حلاق (2/ 118)
وروي هذا الحديث من حديث عبد اللَّه بن بسر عن رسول اللَّه -صلى اللَّه عليه وسلم-، ومن حديث الصماء عن عائشة زوج النبي -صلى اللَّه عليه وسلم- عن النبي -صلى اللَّه عليه وسلم-، وقال النسائي: هذه أحاديث مضطربة.
”இவை குளறுபடியான ஹதீஸ்களாகும்” என இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
முஹ்தஸர் சுனன் அபீ தாவூத் லில்முன்திரி (பாகம் 2 பக்கம் 118)
இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இது குளறுபடியான செய்தி என விமர்சித்துள்ளார்.
بلوغ المرام من أدلة الأحكام (ص: 255(
692- وَعَنِ اَلصَّمَّاءِ بِنْتِ بُسْرٍ رَضِيَ اَللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اَللَّهِ – صلى الله عليه وسلم – قَالَ: – لَا تَصُومُوا يَوْمَ اَلسَّبْتِ, إِلَّا فِيمَا اِفْتُرِضَ عَلَيْكُمْ, فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبٍ, أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهَا – رَوَاهُ اَلْخَمْسَةُ, وَرِجَالُهُ ثِقَاتٌ, إِلَّا أَنَّهُ مُضْطَرِبٌ .
وَقَدْ أَنْكَرَهُ مَالِكٌ وَقَالَ أَبُو دَاوُدَ: هُوَ مَنْسُوخٌ
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தம்முடைய ”புலூகுல் மராம்” என்ற நூலில் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு பின்வருமாறு கூறுகிறார்கள். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இது குளறுபடியான செய்தியாகும். இதனை இமாம் மாலிக் மறுத்துள்ளார். இமாம் அபூதாவூத் இது ”மன்ஸுஹ்” (சட்டம் மாற்றப்பட்ட செய்தி) எனக் கூறியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நூல் : புலூகுல் மராம்.
இதுவரை நாம் பார்த்தை விமர்சனங்களின் அடிப்படையில் ”சனிக்கிழமை நோன்பு நோற்கக்கூடாது” என்ற வரும் செய்தி பலவீனமானது என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அல்பானி போன்றவர்கள் இதனை ஸஹீஹ் என்று கூறுவதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
அறிஞர்கள் இதை மறுக்க காரணம் என்ன? இதை விட பலமான ஹதீஸ்களுக்கு முரணாக அமைந்துள்ளதே காரணமாகும்.
மேற்கண்ட செய்தி கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்று குறிப்பிடுகிறது.
இதிலிருந்து எந்த ஒரு சுன்னத்தான, அல்லது நபிலான நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்ற கருத்து வெளிப்படுகிறது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சனிக்கிழமை நோற்கும் வகையில் பல சுன்னத்தான நோன்புகளை நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். நாமாக விரும்பி நஃபிலாக நோற்பதற்கும் அனுமதித்துள்ளார்கள். அவை மிகப் பலமான அறிவிப்பாளர்கள் வரிசையில் வந்துள்ளது.
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ ، أَوْ بَعْدَه. (رواه البخاري)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1985
حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ شُعْبَةَ (ح) وَحَدَّثَنِي مُحَمَّدٌ ، حَدَّثَنَا غُنْدَرٌ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي أَيُّوبَ ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهْيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لاَ قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَت لاَ قَالَ فَأَفْطِرِي. وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ. (رواه البخاري)
ஜுவைரியா (ரலி) அவர்கள் அறிவி்க்கிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்த போது என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை! என்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் நோன்பை முறித்துவிடு! என்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்! என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 1986
மேற்கண்ட ஹதீ்ஸ்களில் நாமாக விரும்பி நோற்கும் நஃபிலான நோன்பை வெள்ளிக் கிழமை மட்டும் நோற்கக் கூடாது. மாறாக வியாழன் மற்றும் வெள்ளியில் அல்லது வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் நோற்கலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள்.
இந்த உறுதியான ஹதீஸ்களுக்கு நேர் முரணாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளது.
பின்வரும் செய்திகளும் மேற்கண்ட செய்திக்கு முரணாக அமைந்துள்ளது.
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ )رواه مسلم)
“யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார்” என நபி (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் (2159) அபூதாவூத் 2078
ஷவ்வால் மாத ஆறு நோன்பு சுன்னத்தான நோன்பாகும். இதனை ஷவ்வால் மாதத்தில் ஏதேனும் ஒரு ஆறு நாட்களில் தொடர்ச்சியாகவோ, அல்லது தனித்தனியான நாட்களிலோ நோற்றுக் கொள்ளலாம். தொடர்ச்சியாக நோற்கும் போதும் அதில் சனிக்கிழமை வரும். அது போன்று தனித்தனியாக நோற்கும் போதும் சனிக்கிழமை வரும். எனவே மேற்கண்ட ஹதீஸும் சனிக்கிழமை நோன்பு நோற்கலாம் என்பதற்குரிய சான்றாகும்.
قَالَ كَيْفَ مَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا قَالَ « ذَاكَ صَوْمُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ.
உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
நூல் ; முஸ்லிம் (2151)
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « ثَلاَثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِى بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ ».
“மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் ; முஸ்லிம் (2151)
தாவூத் (அலை) அவர்கள் நோன்பு வைத்த பிரகாரம் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விடுவது, மாதம் மூன்று நோன்பு, ஆஷூரா நோன்பு, அரஃபா நோன்பு இவை அனைத்துமே சுன்னத்தான நோன்புகளாகும். இவற்றை சனிக்கிழமையிலும் நோற்க வேண்டிய நிலை ஏற்படும். கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்றால் நபி (ஸல்) அவர்கள் இந்த சுன்னத்தான நோன்புகளை சனிக்கிழமை நோற்காதீர்கள் எனத் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.
அவ்வாறு கூறாததிலிருந்தே இந்த நோன்புகளை சனிக்கிழமை நோற்க வேண்டிய நிலை வந்தால் நோற்கலாம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமை நோற்பது கூடாது என்று செய்தி மேலே நாம் எடுத்தக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணாக இருக்கின்ற காரணத்தினால் அது ஷாத் வகை செய்தியாகிறது. எனவே அது பலவீனமானதாகும்.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]