கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்
இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும்.
ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.
ஆனால் அதற்கான இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும். கொல்லப்பட்டவனுக்குப் பல வாரிசுகள் இருந்து, ஒரே ஒருவர் மன்னித்தால் கூட கொலையாளிக்கு மரண தண்டனை கிடையாது.
ஏதேனும் மன்னிக்கப்பட்டால் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் என்பது சிறு பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். கொல்லப்பட்டவனுக்கு பத்து வாரிசுகள் இருந்து ஒன்பது பேர் கொலையாளியை மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் மன்னிக்கலாம் என்கிறார். இப்போது சிறிதளவு மன்னிக்கப்பட்டு விட்டதால் கொலையாளிக்கு மரண தண்டனை கிடையாது. கொல்லப்பட்டவனின் வாரிசுகளுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதைச் சட்டமாகக் கொண்டுள்ள பல நாடுகளில் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் அதிபருக்கு வழங்கியிருப்பதைக் காண்கிறோம்.
ஒருவன் கொல்லப்பட்டால் அவனது வாரிசுகள்தான் அதனால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படும் கஷ்டங்களும், வேதனையும், வலியும் அவர்களுக்குத்தான் தெரியும்.
எனவே மன்னிக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவனிடம் தான் இருக்க வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டதால் எந்தப் பாதிப்பும் அடையாத, நாட்டின் அதிபர்களிடம் இந்த அதிகாரத்தை அளிப்பது மாபெரும் அநீதியாகும்.
தனது தந்தையைக் கொன்றவனுக்கு மரண தண்டனை தான் அளிக்க வேண்டும் என்று அவனது மகன் நினைக்கும்போது, அதற்கு எதிராக, நாட்டின் அதிபர் கருணை காட்டுவது மிகப்பெரும் அக்கிரமமாகும்.
இந்த அறிவுப்பூர்வமான, நியாயமான சட்டம்தான் இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.