கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்
நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான்.
ஆனால் திருமணம் என்று வரும் போது மட்டும் இறைக் கட்டளையை மறுத்து, இணை வைக்கும் மாமன் மகளையும், மாமி மகளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தான் ஏகத்துவமா? இதைத் தான் நாம் இந்த ஏகத்துவக் கொள்கையில் கற்றுக் கொண்டோமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று எத்தனையோ பெண்கள் இந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு, இதற்காகக் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்குத் தவ்ஹீது மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் கூட அவர்களுக்கு எப்போதோ திருமணம் ஆகியிருக்கும்.
ஆனால் இன்று அந்தப் பெண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஏன்? தவ்ஹீது ஜமாஅத்தில் மாப்பிள்ளைகளுக்குப் பஞ்சமா? ஏராளமான இளைஞர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் மாமன் மகள், மச்சான் மகள் என்று இணை வைக்கும் பெண்களைத் தேடிச் சென்று திருமணம் முடித்துக் கொள்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
நம்மிடம் கொள்கை உறவு உறுதியாகவில்லை; குருதி உறவுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். மார்க்கச் சொற்பொழிவுகளில் நபிமார்களின் வரலாறுகளையும், சத்திய ஸஹாபாக்களின் வரலாறுகளையும் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் இருந்த கொள்கை உறுதி இன்று நம்மிடம் உள்ளதா?
ஏகத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறுகளை எத்தனையோ சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். அந்த இப்ராஹீம் (அலை) அவர்களிடம் இருந்த கொள்கை உறுதி நம்மிடம் உள்ளதா?
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
இறைவன் இந்த வசனத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தவர்களிடமும் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறுகின்றான். அது எந்த விஷயத்தில் தெரியுமா? “பிரார்த்தனை செய்வதற்கும், நேர்ச்சை செய்வதற்கும், உதவி தேடுவதற்கும் இன்னும் அனைத்து வணக்கங்களுக்கும் தகுதியானவன் ஏக நாயனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்று நீங்கள் சொல்கின்ற வரை உங்களுக்கும் எங்களுக்கும் பகைமையும் விரோதமும் இருந்து கொண்டே இருக்கும்; அது வரை உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது; நீ வேறு; நான் வேறு” என்று கூறி, தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்களே! அந்த விஷயத்தில் முன் மாதிரி உள்ளது.
அன்று அவர்களிடம் இருந்த அந்தக் கொள்கை உறுதி இன்று நம்மிடம் உள்ளதா? இல்லை! அந்த உறுதி இருந்தால் அசத்தியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களிடம் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் உறவை வலுப்படுத்துவோமா? ஏகத்துவ வாதிகளே சிந்தியுங்கள்!
நீங்கள் ஒரு முஷ்ரிக்கான பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்கள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவள் அந்தக் குழந்தையை, ஏக இறைவனை மட்டும் வணங்கக்கூடிய பிள்ளையாக வளர்த்தெடுப்பாளா? அல்லது தன்னைப் போலவே முஹ்யித்தீனையும், நாகூர் ஆண்டவரையும் (?) வணங்கக்கூடிய பிள்ளையாக அந்தக் குழந்தையை வளர்ப்பாளா? ஏனெனில் தந்தையை விட தாயிடத்தில் தான் குழந்தை அதிக நேரம் உள்ளது. அவள் அக்குழந்தைக்கு எந்தக் கொள்கையை ஊட்டி வளர்க்கிறாளோ அந்தக் கொள்கையில் தான் அது வளரும்.
“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே! அவன் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே!” என்று கண்ணதாசன் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் அவர் கவிதையாக எழுதினார்.
“பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 15036, 15037
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளை இடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
இந்த வசனத்தில் இறைவன் “உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து காத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான். ஆனால் நாமோ தெரிந்து கொண்டே நம் சந்ததிகளை நரகத்தில் கொண்டு சேர்க்கிறோம்.
வணங்கப்படுவதற்கும், பிரார்த்திக்கப்படுவதற்கும் தகுதியானவன் ஏகனாகிய அந்த அல்லாஹ் தான். இதற்கு மாற்றமாக நாம் நடந்தால் மறுமையில் நாம் நரகத்தில் தள்ளப்படுவோம் என்று நம்புகின்ற ஒருவன் அதற்கு நேர் மாறாக நடக்கக் கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்குமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இன்று எத்தனையோ பெண்கள் ஏகத்துவத்திற்காக தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இவர்களின் நிலை என்ன?
எங்கள் கல்லூரியில் படித்த ஒரு பெண், “வரதட்சணை வாங்கக் கூடிய இணை வைக்கும் ஒருவனை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; இணை வைக்காத ஏகத்துவ மாப்பிள்ளையைத் தான் மணமுடிப்பேன்’ என்று இது நாள் வரை காத்திருந்தாள். அவளுடைய குடும்பத்தாரும் தங்கள் பிள்ளைக்கு தவ்ஹீது மாப்பிள்ளை வரும் என்று காத்திருந்தார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் தவ்ஹீது மாப்பிள்ளை வரவில்லை.
எனவே அவளுடைய பெற்றோர், இனியும் எத்தனை நாட்களுக்குத் தான் குமரை வைத்துக் கொண்டு இருப்பது? என்று எண்ணி வரதட்சணை கொடுத்து, இணை வைக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவளோ, “எனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் குடும்பத்தார் இணை வைப்பவர்கள்; நான் என்ன செய்யப் போகின்றேன்?’ என்று பதறுகின்றாள்.
எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் சில நாட்களுக்கு முன்னால் என்னிடம் வந்தாள். “என் கணவனின் குடும்பத்தார் அனைவருமே இணை வைக்கக்கூடியவர்கள். ஏதேனும் கந்தூரி வந்தால் அங்கு செய்யக்கூடிய சாப்பாட்டைக் கொண்டு வந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று என்னை வற்புறுத்துகிறார்கள். நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னால் கூட அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?” என்று கேட்கிறாள்.
சமீபத்தில் சேரன்மகாதேவி என்ற ஊருக்கு, மார்க்கச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்த போது அங்கு ஒருவர், “இந்த ஊரில் தர்கா வழிபாடு அதிகமாக உள்ளது. எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை’ என்று சொல்லி விட்டு, “என் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது; அவர்களும் தர்ஹாவாதிகள் தான்’ என்று கூறினார்.
“இணை கற்பிப்பவர்களை இறை நம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை விட்டும் இறைவன் தடுத்துள்ளான்; எனவே இணை வைப்பவர்களுக்குத் திருமணம் செய்து வைக்காதீர்கள்’ என்று அவர்களிடம் கூறி விட்டு அந்தப் பெண்ணிடம், “நீங்கள் மார்க்கத்தைப் பற்றி அறிந்தவர் தானே! உங்கள் தாயாரிடம் இது பற்றி எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டேன்.
அதற்கு அந்தப் பெண், “நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டேன். ஆனால் என் தாய் கேட்பதில்லை. “இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லி விட்டால் பிறகு வேறு யார் உன்னைத் திருமணம் செய்வார்கள்?’ என்று கேட்கிறார். நான் இறைவனிடம் துஆச் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்களும் எனக்காக துஆச் செய்யுங்கள்’ என்று கூறினாள்.
நமக்குத் தெரிந்தது சில பெண்கள் தான். நமக்குத் தெரியாமல் எத்தனை பெண்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, ஏகத்துவவாதியைத் தான் திருமணம் முடிப்பேன் என்று ஏங்கி, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஏகத்துவம் சுடர் விட்ட ஆரம்பத்தில் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் தவ்ஹீதுவாதிகள் இருந்தார்கள். ஆனால் இன்று இந்த தவ்ஹீது ஜமாஅத் மிகப் பெரும் சமுதாயமாக இருக்கிறது. ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர், தவ்ஹீதை ஏற்றுக் கொண்ட பெண்களைக் கண்டு கொள்ளாமல் இணை வைக்கும் பெண்களைத் தேடிச் சென்று திருமணம் செய்கிறார்கள்.
உறுதியாக நின்ற உமர் (ரலி)
நபித்தோழர்களிடம் இருந்த கொள்கை உறுதியும், பிடிப்பும் இன்று நம்மிடத்தில் இல்லை. கொள்கையா? உறவா? என்று வரும் போது நபித்தோழர்கள் உறவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
“(பத்ருப் போரில் பிடிபட்ட) இந்தக் கைதிகள் விஷயமாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என பத்ருடைய தினத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, அபூபக்ர் (ரலி), “அல்லாஹ்வின் நபியே! அவர்கள் நம்முடைய சித்தப்பா, பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த மக்களாவர். எனவே அவர்களிடத்தி-ருந்து நஷ்ட ஈட்டை வாங்கி விட்டு, அவர்களை விடுதலை செய்வதை நான் விரும்புகின்றேன். அந்த நஷ்ட ஈடு காஃபிர்களுக்கு எதிராக நமக்கு ஒரு பலமாகவும், இதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் வழிகாட்டவும் கூடும்” என்று கூறினார்கள்.
“கத்தாபின் மகனே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், “இல்லை! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் கொண்ட கருத்தை நான் கொண்டிருக்க வில்லை. மாறாக, அவர்களை எங்கள் பொறுப்பில் விட்டு விடுங்கள். அவர்களது கழுத்துக்களை நாங்கள் வெட்டுகின்றோம். அலீயிடம் அகீலை விடுங்கள். அவர் அவரது கழுத்தை வெட்டுவார்.
(தன் குடும்பத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்னாருக்குரிய வாய்ப்பை உமரிடத்தில் விடுங்கள். நான் அவருடைய கழுத்தை வெட்டுகின்றேன். நிச்சயமாக இவர்களெல்லாம் இறை நிராகரிப்பின் தலைவர்களும் அதன் பெரும் புள்ளிகளும் ஆவார்கள்” என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்ன கருத்தின் பால் சாயாமல் அபூபக்ர் கூறிய கருத்தின் பாலே சாய்ந்தார்கள். மறு நாள் நான் வந்த போது, அல்லாஹ்வின் தூதரும், அபூபக்ரும் அழுது கொண்டிருந்தனர். “நீங்களும் உங்களுடைய தோழரும் எதனால் அழுகின்றீர்கள்? என்று எனக்கு அறிவியுங்கள். அழ முடிந்தால் நானும் அழுகின்றேன். நான் அழ முடியவில்லையெனில் நீங்கள் அழுவதற்காக நானும் அழுவது போல் பாவனை செய்கின்றேன்” என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தோழர்கள் அந்தக் கைதிகளிடமிருந்து நஷ்ட ஈட்டை வாங்கியதற்காக எனக்கு நேர்ந்ததை எண்ணி அழுகின்றேன். அவர்களுக்குரிய வேதனை இந்த மரத்திற்கு அருகில் என்னிடம் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். அல்லாஹ் 8:68, 69 வசனங்களை இறக்கினான்.
அறிவிப்பவர்: உமர் (ரலி); நூல்: முஸ்லிம் 3621
மாமன், மச்சான் யாராக இருந்தாலும் அவர்களை எங்கள் கைகளாலேயே சிரச் சேதம் செய்கிறோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்களே! இந்த அணுகுமுறை நம்மிடம் வர வேண்டும். அதைத் தான் அல்லாஹ்வும் அங்கீகரித்தான்.
(முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாம் வெட்டிக் கொல்லச் சொல்கிறது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. முஸ்லிம்களை வேரோடு அழித்தொழிப்பதற்காக படை திரட்டி யுத்தக் களம் வந்தவர்களைப் பற்றிய நிகழ்ச்சி என்பதைக் கவனத்தில் கொள்க!)
நாங்கள் ஏகத்துவவாதிகள்; ஏகத்துவத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்; நாங்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளையை அப்படியே எடுத்து நடப்பவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே! திருமண விஷயத்தில் நீங்கள் அப்படித் தான் நடக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்.