*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 76* ||
அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *161- 170* வரை]
1 ) *சனிக்கிழமையன்று(فِى ٱلسَّبْتِ)* வரம்பு மீறிவர்களை பற்றி பற்றி *குறிப்பு எழுதுக*?
இச்சம்பவம் தொடர்பாக [இஸ்ரவேலர்கள் *சனிக்கிழமையன்று(فِى ٱلسَّبْتِ)]* மூன்று பிரிவினர்களை நாம் பார்க்க முடிகிறது….
*முதல் பிரிவினர்* : இறை ஆணையை மீறி சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற கூட்டத்தினர்.
*இரண்டாவது பிரிவினர்* : இறை ஆணையை மீறியவர்களிடம் சென்று இவ்வாறு மீன் பிடித்தல் கூடாது என்று அந்த தீமையை தடுத்த கூட்டத்தினர்.
*மூன்றாவது பிரிவினர்*: இறை ஆணையை மீறவும் இல்லை அதே சமயத்தில் மீறியவர்களை தடுக்கவும் இல்லை
___________________________
சற்று விரிவாக….
*சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது* என்று கட்டளைப் பிறப்பித்த அல்லாஹ் சனிக்கிழமைகளில் மாத்திரம் அதிக அளவிலான *மீன்கள் தண்ணீரின் மேற்பரப்பு வரைச் செய்து இஸ்ரவேலர்களைச் சோதித்தான்*.
(7:163) கடலுக்கு அருகிலிருந்த ஓர் ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையன்று வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! ஏனெனில், அவர்களிடம் *சனிக்கிழமையன்றுதான் அவர்களுக்குரிய மீன்கள் நீரின் மேற்பரப்பில் அதிகமாக வந்தன*. சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
வரம்பு மீறுதலையே வாடிக்கையாகக் கொண்ட இஸ்ரவேலர்களில் *ஒரு பிரிவினர் இறையாணையை மீறி* சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
_________________________
இரண்டாவது பிரிவினர் *குற்றம் இழைத்த மக்களை தடுத்து அவர்களை விட்டு விலகினர்.*
_________________________
மூன்றாவது பிரிவினர் *குற்றம் இழைக்கவுமில்லை, குற்றம் இழைத்தவர்களை தடுக்கவும் இல்லை.*
மாறாக *அல்லாஹ் அழிக்க இருக்கிற அல்லது கடுமையான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்திற்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?* என்று தீமையை எதிர்த்தவர்களிடம் (*இரண்டாவது பிரிவினரிடம்*) கேட்டனர்.
அதாவது இவர்கள் *அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காகி அழிக்கப்பட்டுவிடுவர்* என்பது உங்களுக்குத் தெரிந்தும், இவர்களை *ஏன் தடுக்கிறீர்கள்? இவர்களைத் தடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றனர்.*
அதற்கு தீமையை எதிர்த்தவர்கள் (*இரண்டாவது பிரிவினரிடம்*) , *விசாரணையின் போது உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காக நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்* என்ற பொறுப்பு நமக்கு இருப்பதால், அல்லாஹ் (மறுமையில்) விசாரிக்கும் போது பதிலளிக்க ஏதுவாகவும் அவர்கள் *இறையச்சம் உடையோராக ஆகக் கூடும் என்பதற்காகவுமே* (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகிறோம்) என்று பதிலளித்தார்கள்.
அறிவுரை கூறப்பட்ட பின்பும் வரம்பு மீறியவர்களை அல்லாஹ் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றிவிட்டான்.
இதனைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
____________________________
(7 : 164,165,166) அல்லாஹ் அழிக்கவிருக்கின்ற அல்லது கடுமையான வேதனையால் தண்டிக்கவிருக்கின்ற ஒரு கூட்டத்திற்கு நீங்கள் எதற்காக அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒருசாரார் (மற்றொரு சாராரிடம்) கேட்டபோது *உங்கள் இறைவனிடம் (மறுமையில் நாங்கள்) தகுந்த காரணம் கூறுவதற்காகவும், அவர்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காகவும் (இவ்வாறு அறிவுரை கூறுகிறோம்)* என்று பதிலளித்தனர்.
தமக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, *தீமையைத் தடுத்தோரை நாம் காப்பாற்றினோம். அநியாயம் செய்தோரை அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக கடுமையான வேதனையால் பிடித்தோம்*.
எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை அவர்கள் மீறியபோது *நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்!* என அவர்களுக்குக் கூறினோம்.
(2:65,66) உங்களில் (ஒரு பகுதியினர்) சனிக்கிழமை வரம்பு மீறினர். எனவே *நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்* என்று அவர்களிடம் கூறினோம். இதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்.
அக்காலத்தில் இருந்தவர்களுக்கும், அதற்குப் பின்வருவோருக்கும் அதைப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு அறிவுரையாகவும் ஆக்கினோம்.
_________________________
(5:60) *அல்லாஹ்விடம் இதைவிட மோசமான பலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா*? யாரை அல்லாஹ் சபித்து, அவர்கள்மீது கோபமுற்று, அவர்களில் சிலரைக் *குரங்குகளாகவும் சிலரைப் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வணங்கியோருமே தரங்கெட்டவர்கள்; நேர்வழியிலிருந்து தவறியவர்கள்* என்று கூறுவீராக!
________________________
*தீமையைத் தடுக்காமல் இருத்தல் தண்டனைக்குரிய குற்றமே*
*தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து அழிக்கப்பட்டனர்* என்றும் இவ்வசனம் கூறுகிறது.
தீமையைத் தடுக்காமல் தம்மளவில் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
_______________________
*இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்ட பின்புதான் உலகத்தில் குரங்கினமும், பன்றியினமும் தோன்றினவா?*
அல்லது ஏற்கனவே இந்த இரண்டு இனங்களும் இருக்கும் நிலையில் மாற்றப்பட்ட இவர்களும் இனப்பெருக்கம் செய்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்குப் பின்வரும் நபிமொழிகள் பதிலளிக்கின்றன,
“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் *குரங்குகளும், பன்றிகளும் யூதர்களின் வழித்தோன்றல்களா?* எனக் கேட்டோம்.
அதற்கு அவர்கள் *இல்லை; அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரைச் சபித்து அவர்களை உருமாற்றம் செய்துவிட்டால் அவர்களுக்குச் சந்ததிகள் இருப்பதில்லை. குரங்குகளும், பன்றிகளும் ஏற்கனவே இருந்த படைப்புகள் தாம். யூதர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டபோது, அவர்களை உருமாற்றிக் குரங்குகளைப் போன்றும், பன்றிகளைப் போன்றும் ஆக்கினான்* என்று கூறினார்கள்.
(அஹ்மத் – 3997)
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*