*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 23* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *41-50* வரை)]

1. எதற்காக பின் வரும் குற்றச்செயலில் ஈடுப்பட்டிருந்தாலும் (*திருட்டு & விபச்சாரம்*) சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று ஜிப்ரீல் அலைஹிஸலாம் நபிகளாரிடம் கூறினார்கள்?

2. *அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அந்நாளில் எதை விரும்புவார்கள்*?

3. *மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?* (கூடும்/கூடாது என்றாலும் ஆதாரத்தை பதிய வேண்டும்)

_______________________

1. *அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் மரணித்ததின் காரணமாக*

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்துவிட்டவர் சொர்க்கம் செல்வார் எனும் நற்செய்தியைத் தெரிவித்தார். *அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* என்று நான் கேட்க, ஜிப்ரீல் *ஆம். அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே* என்று பதிலளித்தார்கள். (புகாரி: 7487)

___________________________

2. *பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்*

யார் (அல்லாஹ்வை) மறுத்து, தூதருக்கு மாறு செய்தார்களோ அவர்கள் *அந்நாளில் தங்களுடன் பூமி தரைமட்டமாக்கப்பட்டிருக்கக் கூடாதா*? என விரும்புவார்கள்.(4:42)

___________________________

3. மாதவிடாய் பெண்கள், பயானுக்காக பள்ளியின் ஓரத்தில் இருக்கலாமா?

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பயான் நடக்கும் போது பள்ளியில் ஓரமாக இருந்து கொள்ளலாமா?

❌ கூடாது என்பதே சரியான நிலைப்பாடாகும் ❌

பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.

பள்ளிவாசல்கள் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது.

பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்வது கூடாது.

பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர்வது கூடாது.

பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்வது கூடாது.

பள்ளிவாசல்களில் இல்லறம் தொடர்பான எந்தக் காரியங்களிலும் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் தொழுபவர்களுக்கு இடையூறாக சப்தமிடக் கூடாது.

என்பன போன்ற பல ஒழுக்கங்களை மார்க்கம் நமக்குக் காட்டித் தந்துள்ளது.

அது போன்ற ஒழுக்கங்களில் ஒன்றுதான் குளிப்புக் கடமையான ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குளிப்புக் கடமை நீங்கி சுத்தமாகின்ற வரை பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்பதற்கு பின் வரும் வசனத்தை பார்ப்போம்

அது தொடர்பான விவரங்களை நாம் விரிவாகக் காண்போம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்ற கருத்துடையவர்கள் 4:3 வசனத்தை முதல் ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:43

பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. தொழாதீர்கள் என்று சொல்லாமல் தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று கூறப்படுகிறது.

பள்ளிவாசலுக்கு வருவது தான் தொழுகைக்கு நெருங்குதல் என்ற சொல்லால் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்து செல்வோராகவே தவிர என்று இதனுடன் சேர்த்து சொல்லப்படுவதால் இது இடத்தைத் தான் குறிக்கும். தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்பதுடன் கடந்து செல்லுதல் என்று சேர்த்துக் கூறப்படுவதால் பள்ளிவாசலுக்குள் குளிப்புக் கடமையானவர்கள் செல்லக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நாமும் இக்கருத்தில் உடன்படுகிறோம்.

ஆனால் இவ்வசனத்தின் பொருள் இதுவல்ல. இதற்கு வேறு பொருள் தான் கொடுக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். நாம் செய்யும் பொருளோ, அல்லது அவர்கள் செய்யும் பொருளோ இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும்.

எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்ற கருத்து உள்ளவர்கள் இவ்வசனத்துக்கு எவ்வாறு பொருள் கொடுக்கின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்.

திருக்குர்ஆன் 4:43

பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர என்று நாம் பொருள் செய்த இடத்தில் வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் கொள்கின்றனர்.

நாம் செய்தது நேரடிப் பொருள் என்றாலும் பாதையைக் கடந்து செல்பவர் என்பதற்கு வழிப்போக்கர் என்று பொருள் கொள்ளவும் அகராதி அனுமதிக்கிறது.

அகராதியில் இடம் இருந்து அது பொருந்தாமல் போனால் அந்தப் பொருளை விடுத்து பொருந்தக் கூடிய பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.

இவர்கள் செய்யும் பொருள் பொருத்தமானது தானா? என்பதை அறிவதற்கு முன்னால் இவ்வாறு பொருள் செய்தால் இதிலிருந்து கிடைக்கும் சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

குளிப்புக் கடமையாக இருக்கும் போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்.

இவர்கள் செய்துள்ள இந்தப் பொருளின் படி வழிப்போக்கர்களுக்கு ஒரு சட்டமும், வழிப்போக்கர் அல்லாதவருக்கு ஒரு சட்டமும் உள்ளதாகத் தெரிகிறது.

வழிப்போக்கர்களாக இருப்பவர்கள் -அதாவது பயணத்தில் இருப்பவர்கள்- தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிக்காமல் தயம்மும் செய்து தொழலாம்; வழிப்போக்கர்களாக இல்லாவிட்டால் அவர்கள் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்; தயம்மும் செய்து தொழக் கூடாது என்பது தான் இவர்கள் கொடுக்கும் பொருளின்படி கிடைக்கும் சட்டமாகும்.

வேறு வார்த்தையில் இதைச் சொல்வதாக இருந்தால் பயணிகளைத் தவிர மற்றவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளித்தே ஆக வேண்டும். பயணிகளாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம் என்ற கருத்து இவர்கள் செய்யும் அர்த்தத்தில் இருந்து பெறப்படுகிறது.

தயம்மும் என்ற சட்டம் பயணிகளுக்கு மாத்திரம் உரியது. மற்றவர்களுக்கு அல்ல என்பது இதன் சுருக்கமாகும்.

குளிப்பு கடமையானவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று இவ்வசனம் பேசவில்லை என்றும், பாதையைக் கடந்து செல்வோராக தவிர என்ற சொற்றொடருக்கு வழிப்போக்கர்களைத் தவிர என்பது தான் பொருள் எனவும் இவர்கள் வாதிட்டனர். இப்படி வாதிட்டவர்கள் தாங்கள் செய்த பொருளுக்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டுமல்லவா?

பயணிகளாக இருந்தாலும் பயணிகளாக இல்லாவிட்டாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாமா என்று இவர்களிடம் கேட்டால் தயம்மும் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் வழிப்போக்கரும் தயம்மும் செய்யலாம்; வழிப்போக்கர் அல்லாதவரும் தயம்மும் செய்யலாம் என்று இவர்கள் சட்டம் சொல்கின்றனர். அப்படியானால் வழிப்போக்கரைத் தவிர என்று அல்லாஹ் கூறியது அர்த்தமற்றது என்று இவர்கள் ஆக்குகிறார்கள்.

பள்ளிவாசலைக் கடப்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை என்பதற்காக வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் செய்தவர்கள் தாங்கள் செய்த பொருளின் படி என்ன கருத்து வருகிறதோ அதை மறுக்கிறார்கள். வழிப்போக்கர்களைத் தவிர என்ற விதிவிலக்கைப் பொருளற்றதாக ஆக்குகின்றனர்.

எனவே வழிப்போக்கர்களைத் தவிர என்ற அர்த்தம் பொருத்தமற்றதாக உள்ளதால் நாம் செய்த அர்த்தத்தைத் தான் செய்தாக வேண்டும்.

நாம் செய்த அர்த்தம் தான் இங்கே செய்ய முடியும் எனும்போது இவ்வசனம் பள்ளிவாசலைக் கடந்து செல்வது பற்றியே பேசுகிறது என்பதில் சந்தேகமில்லை.

குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிவாசலைக் கடந்து செல்லலாமே தவிர பள்ளிவாசலில் தங்கக் கூடாது என்ற கருத்தை மிகத் தெளிவாகச் சொல்லும் வசனமாக இது அமைந்து விடுகிறது.

அதாவது குளிப்புக் கடமையானவர்கள் தொழுவதும் கூடாது. தொழுமிடத்திற்குள் தங்குவதும் கூடாது. ஆனால் தொழுமிடம் வழியாகக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் அவர்கள் தொழுமிடத்திற்குள் நுழைந்து கடந்து செல்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதே மேற்கண்ட வசனத்தின் பொருளாகும்.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல்கள் : முஸ்லிம் (503)

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (504)

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் அதற்குச் சான்றாக மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் முன்வைக்கின்றனர்.

இந்த  ஹதீஸில் பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்துத் தா என்று நபியவர்கள் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொழுகை விரிப்பு பள்ளிவாசலில் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது.

பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று நபியவர்கள் கேட்டதால் நபியவர்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம். பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று யாரும் கூற மாட்டார்கள்.

பள்ளிவாசலில் தொழுகை விரிப்பு இருந்துள்ளது. வீட்டில் நபியவர்கள் இருந்துள்ளதால் ஆயிஷா (ரலி) அவர்களும் வீட்டில் தான் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த நபியவர்கள் பள்ளியில் இருந்த விரிப்பை எடுத்துத் தருமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்து இருக்கலாம். அல்லது பள்ளிக்குள் கையை நீட்டி எடுத்து இருக்கலாம். ஏனெனில் பள்ளியும் வீடும் அருகருகில் தான் இருந்தன.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபியவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது என்னிடத்தில் வருபவர்களாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் என்னுடைய அறையின் கதவில் சாய்ந்து இருந்து கொள்வார்கள். நான் என்னுடைய அறையில் இருந்தவளாக அவர்களின் தலையைக் கழுவி விடுவேன். நபியவர்களின் ஏனைய உடல் பகுதி பள்ளியிலே இருக்கும்.

நூல் : அஹ்மத் 24608

இது பள்ளிவாசலும், ஆயிஷா (ரலி) அவர்களின் வீடும் ஒன்றாகத்தான் இருந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இது நமது நிலைபாட்டுக்கு எதிராக ஆகாது. நமது நிலைபாட்டை ஒட்டியதாகத் தான் அமையும்.

பள்ளியில் மாதவிடாய்ப் பெண்களும் குளிப்புக் கடமையானவர்களும் தங்கக் கூடாது; ஆனால் கடந்து செல்வதற்காக பள்ளிக்குள் போகலாம் என்பது தான் நமது நிலைபாடு. குர்ஆன் வசனமும் அதைத்தான் சொல்கிறது.

இரண்டாவது ஹதீஸில் நபியவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த தொழுகை விரிப்பை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொண்டு வந்து பள்ளியில் இருந்த நபியவர்களிடம் கொடுத்தார்கள் என்று இதை விளங்கினாலும் இதுவும் நமது நிலைபாட்டுக்கு ஏற்றதாகத் தான் உள்ளது.

பள்ளிக்குள் இருக்கும் பொருளை மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நுழைந்து எடுத்து வரலாம் என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் இருந்து தெரிவதால் அதற்கு விளக்கமாக இந்தச் செயல் அமைந்துள்ளது.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசலில் தங்குவதற்கு இது ஆதாரமாக ஆகாது.

மாதவிடாய் உன் கையில் இல்லையே என்று நபியவர்கள் ஏன் சொன்னார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

பள்ளிக்குள் நுழையாமல் கையை மட்டும் பள்ளிக்குள் நீட்டி விரிப்பை எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதை இதில் இருந்து விளங்கலாம். உன் கையில் மாதவிடாய் இல்லையே என்று நபியவர்கள் கூறியதில் இருந்து இப்படி விளங்கலாம். இப்படி விளங்கினால் பள்ளிக்குள் கையை மட்டும் தான் நீட்டினார்கள் என்பதற்குத் தான் இது ஆதாரமாக அமையும்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழக் கூடாது என்பதால் தொழுகைக்கான விரிப்பையும் தொடக் கூடாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் தயங்கி இருக்கலாம். அந்தத் தயக்கத்தை நீக்குவதற்காக உன் கையில் மாதவிடாய் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.

சில அறிவிப்புகளில் நபியவர்கள் தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நான் தொழக்கூடியவளாக இல்லையே என்று பதில் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இது ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகை விரிப்பைத் தொடுவதை தவறு என்று எண்ணினார்கள் என்ற கருத்தையும் தரலாம்.

எனவே குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குள் நுழைவது கூடாது என்பதற்கு திருமறை வசனம் சான்றாக உள்ளது. மாதவிலக்கு பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு நேரடியான எந்தச் சான்றும் இல்லை. எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்பதே சரியானதாகும். அதே ஏதாவது தேவைக்கு பள்ளியைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்கள் உள்ளே சென்று உடனடியாக வெளியே வருவதில் எந்தத் தவறும் இல்லை

பயான் போன்றவைகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டுமானால் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலேயே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

https://eagathuvam.com/மாதவிடாய்-ஏற்பட்டுள்ள-பெ/

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *