அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 228*
அத்தியாயம் 33 [ *அல் அஹ்ஸாப்* (எதிரணிகள்) வசனங்கள் (31~40]
_______________________________
1 ) *தனித்து விட்டவர்கள்* (الْمُفَرِّدُونَ) என்போர் யார்?
பதில்: *அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும்* (நூல்கள்: முஸ்லிம் (5197), அஹ்மத் (8964))
விளக்கம்: *முஃபர்ரிதூன் (الْمُفَرِّدُونَ*) என்பதன் பொருள்: *தனித்துவிட்டவர்கள்* அல்லது *முந்திச் செல்பவர்கள்* என்பதாகும்.
நன்மையான காரியங்கள் செய்வதிலும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறுவதிலும் மற்றவர்களை விட இவர்கள் முந்திவிடுகிறார்கள்.
*அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும்* என்பது, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், *நாவால், மனதால், செயல்களால்* அல்லாஹ்வின் நினைவோடு வாழ்பவர்களைக் பற்றி பேசுகிறது.
இத்தகையவர்களே, மறுமையில் அல்லாஹ்வின் அருளையும், மகத்தான வெற்றியையும் பெறுவதில் மற்ற அனைவரையும் விட முந்திச் செல்பவர்கள் ஆவார்கள். (இந்த பட்டியலில் இடம் பெற முயற்சிப்போமாக)
________________________________
2 ) *நபியின் மனைவியருக்கு, அல்லாஹ் வழங்கும் மூன்று முக்கிய வழிகாட்டுதல்கள்* யாவை?
பதில்:
1. (அந்நிய ஆண்களிடம்) குழைந்து பேசாதீர்கள்.
2. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்.
3. முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள். (33:32-33)
________________________________
3 ) மற்ற இறைத்தூதர்களை விட, நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆறு சிறப்புகள் யாவை?
பதில்:
1. ஒருங்கிணைந்த சொற்கள் வழங்கப்பட்டது.
2. (எதிரிகளின் உள்ளத்தில்) அச்சம் ஊட்டப்பட்டு வெற்றியளிக்கப்பட்டது.
3. போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டது.
4. பூமி முழுவதும் சுத்தம் செய்வதற்கேற்றதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டது.
5. மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பப்பட்டது.
6. அவர்களைக் கொண்டு நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றது. (முஸ்லிம் 907)
________________________________
4 ) *அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும்* யாருக்குத் தயாரித்துள்ளான்?
பதில்: முஸ்லிமான, நம்பிக்கை கொண்ட, கட்டுப்படும், உண்மை பேசும், பொறுமையான, அடக்கமான, தர்மம் செய்யும், நோன்பு நோற்கும், கற்பைக் காத்துக் கொள்ளும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தயாரித்துள்ளான். (33:35)
________________________________
5 ) நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து எதையாவது மறைப்பவராக இருந்திருந்தால், எந்த வசனத்தை மறைத்திருப்பார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்?
பதில்: “(நபியே!) அல்லாஹ் வெளிப்படுத்த இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்துக் கொண்டீர்…” என்று தொடங்கும் (33:37) வசனத்தைத்தான் மறைத்திருப்பார்கள். (புகாரி 7420)
_______________________________
6 ) *ஒரு காரியத்தில், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு முடிவை எடுத்துவிட்டால்*, ஒரு இறைநம்பிக்கையாளரின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?
பதில்: *அந்தக் காரியத்தில், தங்களுக்குச் சுயவிருப்பம் கொள்ளுதல் (அதாவது, மாற்றுக்கருத்து கொள்ளுதல்) கூடாது*. மீறினால், அவர்கள் தெளிவாக வழிகெட்டு விட்டனர். (33:36)
________________________________
7 ) *நபித்துவமும், தூதுத்துவமும் நிறைவு பெற்ற பிறகு, எஞ்சி இருப்பது என்ன*?
பதில்: நற்செய்திகள் (முபஸ்ஸராத்) மட்டுமே எஞ்சியுள்ளன. அது, *ஒரு முஸ்லிம் காணுகின்ற நல்ல கனவாகும்*.(திர்மிதீ 2198)
________________________________
8 ) நபி (ஸல்) அவர்கள், *தமக்கும் தமக்கு முன் சென்ற நபிமார்களுக்கும்* கூறும் உதாரணம் என்ன?
பதில்: அழகாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டில், ஒரு செங்கல் வைக்கும் இடம் மட்டும் காலியாக இருந்தது. நான் தான் அந்த இறுதிச் செங்கல். என்னைக் கொண்டு நபிமார்களின் வரிசை நிறைவு பெற்றுவிட்டது. (புகாரி 3535)
________________________________
9 ) *நபியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தர்மம் தடை* என்பதற்கு ஹதீஸில் கூறப்படும் உதாரணம் என்ன?
பதில்: ஹசன் (ரலி) அவர்கள் தர்மப் பேரீச்சம் பழத்தை வாயில் வைத்தபோது, நபி (ஸல்) அவர்கள், “சீ…சீ… நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது” என்று கூறி அதைத் துப்பச் சொன்னார்கள். (முஸ்லிம் 1939)
________________________________
10 ) *அஹ்லுல் பைத்(أَهْلُ الْبَيْتِ-நபிகளாரின் குடும்பத்தார்கள்*) சார்ந்தவர்கள் யார்? யார்?
பதில்: ஹதீஸ்களின் அடிப்படையில், நபி (ஸல்) அவர்களின் மனைவியர், மற்றும் அவர்களின் இரத்த உறவினர்களான அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) மற்றும் தர்மம் பெறுவது தடை செய்யப்பட்ட பனூ ஹாஷிம் கிளையினர் (அலீ, அகீல், ஜஃபர், அப்பாஸ் ஆகியோரின் குடும்பத்தார்) அனைவரும் “அஹ்லுல் பைத்” ஆவர். (முஸ்லிம் 4807, 4782)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*