குர்பானி மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மாற்றப்பட்டச் சட்டம்
பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில் தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ
நூல் : புகாரி (5423)
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர் பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பலவீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)