குர்பானி பிராணியின் தோல் & ரத்தம்
குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : அலீ(ரலி).
நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)
தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம்.
மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும். நம்பிக்கைக்குரிய இயக்கம் ஏழைகளுக்குத் தருவதாகக் கூறி தோட்களை வாங்கினால் அவர்களிடத்தில் தோல்களை ஒப்படைப்பது தவறல்ல.
இரத்தம்
பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனென்றால் இரத்தம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
அல்குர்ஆன் (2 : 173)